வரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில்
|மேக நோயால் அவதியுற்ற குலோத்துங்கச் சோழன், இத்தலத்தில் உள்ள மானச தீர்த்த குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான் என குறிப்புகள் உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது வரஞ்சரம் கிராமம். இயற்கை எழில்மிகுந்து காணப்படும் இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.
மூலவர், தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழும் இக்கோவில், காசிக்கு நிகரானது என்று கூறுகின்றனர்.
குலோத்துங்கச் சோழன்
இக்கோவில் சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் மேக நோயால் அவதியுற்ற குலோத்துங்கச் சோழன், இத்தலத்தில் உள்ள மானச தீர்த்த குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான். நோயை நீக்கிய ஈசனுக்கு கோவில் அமைக்கும்படி அகத்தியர் கூறியதன்படி, இந்தக் கோவிலை மன்னன் எழுப்பியதாக குறிப்புகள் சொல்கின்றன.
பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் இக்கோவிலில் திருப்பணி செய்ததாக தல வரலாறு கூறுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கோவிலின் எதிரில் உள்ள கலிதீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். பின்பு பசுபதீஸ்வரரையும், தொடர்ந்து நவக்கிரகங்கள், பாலாம்பிகை அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு வணங்கினால் நவக்கிரகங்களின் துன்பங்களும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் அமைப்பு
பசுபதீஸ்வரர் கோவிலின் நுழைவு பகுதியில் சிறிய முகப்பு மண்டபம் உள்ளது. இதன் மேல் பகுதியில் காளை வாகனத்தில் சிவன் - பார்வதியும், இவர்களுக்கு வலது புறம் விநாயகர், இடதுபுறம் அசுவபாதப் பெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கீழ் பகுதியில் நுழைவு வாசலின் இருபுறமும் சிறிய விநாயகர், முருகன் திருமேனிகள் உள்ளன. மேலும் மண்டபத்தின் இருபக்க சுவர்களிலும் கதாயுதத்தின் மேல் கால் பாதத்தை தாங்கி நிற்கும் துவாரபாலகர்கள், இடது பக்கம் லிங்கத்தின் மீது பால் மழை பொழியும் காமதேனு, வலது பக்கம் மீனாட்சி திருக்கல்யாண காட்சி போன்ற ஓவியங்கள் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.
முகப்பு மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால், நம் கண்களுக்கு முன்னால் வெளிப்படுவது திருமண மண்டபம். இதற்கு அடுத்து மண்டபத்தை எதிர் நோக்கி விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு பின்புறம் பலி பீடம், கொடி மரம் ஆகியவையும், இதையொட்டி நந்தி பகவான் பசுபதீஸ்வரரை எதிர்நோக்கிய வண்ணம் இருப்பதையும் காணலாம்.
இதற்கு அடுத்ததாக மூலவர் அமைந்துள்ள மண்டபத்துக்கு செல்ல குகை போன்ற சிறிய நுழைவு பகுதி உள்ளது. இதன் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர் லிங்க வடிவில் அருள்பாலிப்பதை காணலாம். மூலவர் அறையின் சுற்றுப்பிரகாரத்தில் வலதுபக்கம் சித்தி விநாயகர், லகுலீஸ்வரர், விஸ்வேஸ்வரர், நவக்கிரகங்கள், நீலாவதி - சனீஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் சன்னிதியின் இடது புறம்தான் அம்மன் சன்னிதி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு மூலவர் சன்னிதியின் வலது புறம் பாலம்பிகை அம்மன், அசுவபாதப் பெருமாள் சன்னிதிகள் அமைந்து இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
மேலும் கோவில் வளாகத்தின் உள்ளேயே சிறிய மானசதீர்த்த குளம் அமைந்துள்ளது. இதன் அருகே சூரியன் மற்றும் கால பைரவர் சன்னிதிகள் உள்ளன. சுமார் 15 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இக் கோவிலை சுற்றி 12 அடி உயரம், சுமார் 400 அடி நீளத்துடன் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது.
பெயர் காரணம்
தேவலோகத்தில் முனிவர்கள் சபிக்கப்பட்டதால் பசுக்களுக்கு தீராத நோய் ஏற்பட்டது. எனவே நோய் நீங்குவதற்காக பிரம்மதேவனின் சொற்படி பூலோகத்துக்கு வந்த அப்பசுக்கள், கோமுகி நதியை ஏற்படுத்தி இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தன. இதனால் தங்களது தீரா நோய்கள் நீங்கி பசுக்கள் மீண்டும் தேவலோகம் புறப்பட்டன. அப்போது சிவன், பசுக்களிடம் 'என்ன வரம் வேண்டும்' எனக் கேட்டார். அதற்கு பசுக்கள் "நாங்கள் பூஜை செய்ததால் 4 யுகத்திலும் தங்களை பசுபதீஸ்வரர் என அழைக்க வேண்டும்" என கேட்டதாகவும், அதன்படி மூலவர் 'பசுபதீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தல மூலவர் பசுபதீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு, வேண்டியது கிடைக்கும் என்பதும், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
தியாகதுருகத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், கள்ளக்குறிச்சியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் வரஞ்சரம் கிராமம் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல கள்ளக்குறிச்சியில் இருந்து பஸ் வசதி உள்ளது.