< Back
ஆலய வரலாறு
பிரம்மன் அருள்பெற்ற திருவானைக்காவல் திருக்கோவில்
ஆலய வரலாறு

பிரம்மன் அருள்பெற்ற 'திருவானைக்காவல்' திருக்கோவில்

தினத்தந்தி
|
23 Feb 2024 11:41 AM IST

பிரம்மன், தான் செய்யும் தொழிலைக் கண்டு பெருமிதம் கொண்டதால், அவனது நெஞ்சம் ‘ஆணவம்’ என்ற கொடிய விஷத்தின் வசப்பட்டது.

கங்கையின் புனிதமாக தெற்கே காவிரியும், வடக்கே கொள்ளிடமுமாக அமைந்து இருக்கும் இவ்விரு நதிகளுக்கும் இடையில் சோலைகளுக்கு நடுவே அமைந்து உள்ளது திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். தென்னாட்டில் உள்ள சிவன் கோவில்களில் பஞ்ச பூத தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் திருவானைக் காவல் திருக்கோவில் நீர்த்தலமாக திகழ்கிறது.

9 தீர்த்தங்கள்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கோச்செங்கட் சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த கோவில் சோலைகளுக்கு நடுவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சுவாமி சன்னதி மேற்கு முகமாகவும், அம்மன் சன்னதி கிழக்கு முகமாகவும் அமைந்து உள்ளன. 2,500 அடி நீளமும், 1,500 அடி அகலமும் ஐந்து திருச்சுற்றுக்களை உடையதாகவும் அமைந்து உள்ளது இந்த கோவில். கோவிலுக்கு உள்ளே பல்வேறு தீர்த்தங்களும், பல சன்னதிகளும், பல தென்னந்தோப்புகளும் உள்ளன. இத்தலத்து பெருமானை தரிசிப்பதற்காகவே அரங்கநாதர்(ஸ்ரீரங்கநாதர்) திருவரங்கத்தில்(ஸ்ரீரங்கத்தில்) எழுந்தருளியிருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியம் கூறுகிறது.

இந்த கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம்(சந்திர தீர்த்தம்), சூரிய தீர்த்தம் என 9 தீர்த்தங்கள் உள்ளன.

இக்கோவில் தோன்றிய வரலாறு மற்றும், கோவிலின் பெயர்க்காரணம் குறித்து பார்ப்போம்.

முன் ஒரு காலத்தில் காட்டில் வாழ்ந்த யானை ஒன்று, முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் சிவலிங்கம் ஒன்றை கண்டது. உடனே யானை அங்கேயே தங்கிவிட்டது. தினந்தோறும் காவிரியாற்றுக்கு சென்று நீராடிவிட்டு துதிக்கையால் நீரை எடுத்துக்கொண்டு சில பூக்களையும், தளிர்களையும், காய்கனி கிழங்குகளையும் பறித்துக்கொண்டு வந்து வணங்கும். பின்னர் சிவலிங்க திருமேனி மீது விழுந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி விட்டு, தான் கொண்டு வந்த பொருட்களை சிவபெருமானின் திருவுருவத்தில் அணிவித்து அழகு செய்யும். இவ்வாறாக பல ஆண்டுகள் செய்து வந்தது.

இந்நிலையில் வெண்நாவல் மரத்தில் சிலந்தி ஒன்று வந்து சேர்ந்தது. அதுவும் தனது முன்ஜென்ம வினையால் சிவத்தொண்டு செய்ய விரும்பியது. தன் வாய்நூல் கொண்டு சிவபெருமானுக்கு அழகிய பந்தல் அமைத்து மரச்சருகுகள் மற்றும் குப்பைகள் பெருமான் மீது விழாது காத்து வந்தது. மரத்தின் மீது அமர்ந்து இருந்தால் சிவ அபசாரம் உண்டாகும் என்று எண்ணி பணி முடிந்ததும் வேறிடம் சென்று தங்கியது.

திருவானைக்கா பெயர்க் காரணம்

மறுநாள் வழக்கம்போல், யானை வழிபாட்டுக்குரிய பொருட்களுடன் பெருமானை வழிபட வந்தது. எம்பெருமானின் தலைக்குமேல் படர்ந்திருந்த சிலந்தி வலையை கண்டு சினம் கொண்டு, துதிக்கையால் அப்புறப் படுத்தியது. சிலந்தியின் வலையாகிய எச்சிலை தீண்டியதால் அபச்சாரம் வந்து விட்டது என்று கருதி நீராட சென்று பூ, பழம் முதலியவற்றை எடுத்து வந்து தனது வழிபாட்டை நிறைவேற்றியது.

சிலந்தியும், யானையும் இவ்வாறாக ஒன்றையொன்று சந்திக்காது திருப்பணி செய்து கொண்டு இருந்தபோது, விதி வசத்தால் ஒருநாள் சிலந்தி திருப்பணி செய்து கொண்டிருந்தபோது யானை வந்து விட்டது. உடனே சிலந்தி வலையை யானை தனது துதிக்கையால் குலைத்தது. சினங்கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கை துவாரத்தின் வழியாக புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாத யானை, துதிக்கையை நிலத்தில் பலமாக அறைந்தது. இதனால் நிலைகுலைந்து விழுந்த யானை உயிரிழந்தது. மேலும் துதிக்கையின் உள்ளே புகுந்து கடித்த சிலந்தியும் இறந்துபோனது.

சிவபெருமான் நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்க திருவுருவத்தில் இருந்து உமையொரு பாகனாக விடை மீதேறி வந்து சிவலோகம் சென்று தமது பூதகண தலைமையை ஏற்று வாழ யானைக்கு வரமளித்தார். பின்னர் சிலந்தியை சோழ மன்னனாக பிறக்க திருவருள் செய்தார். அன்றுதொட்டு இத்திருத்தலம் தமிழில் 'திருவானைக்கா' என பெயர் பெற்றது.

பிரம்மன் அருள் பெற்ற தலம்

பிரம்மன் தனது தவறை உணர்ந்து இந்த கோவிலில் வழிபட்டு அருள்பெற்றதாக புராண செய்திகள் தெரிவிக்கின்றன. அது என்ன என்று பார்ப்போம்.

அணு முதல் அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மன் தனது செயல் திறமையை சிந்தித்து பார்த்தான். தான் செய்யும் தொழிலைக் கண்டு பெருமிதம் கொண்டான். பிரம்மனின் பெருமிதம் பூத்த நெஞ்சம், ஆணவம் என்ற கொடிய விஷத்தின் வசப்பட்டது. அதன்படி பிரம்மன் தனது திறமை அனைத்தையும் திரட்டி உருட்டி ஒரு மோகினியை படைத்தான். படைத்த படைப்பினை கடைக்கண்ணால் கண்டான். புனிதமான படைப்பு தொழில் செய்யும் பிரம்மன் அப்போது அறிவை இழந்தான்.

அதன் பிறகு அவனது ஆக்கம் குறைவுற்றது. உலக நெறி சீர்கெட்டது. உயிர்களின் வாழ்வு சீர்கெட்டது. உள்ளன எல்லாம் பாழாக உலக இயக்கம் தடைபட்டது. பிரம்மன் தன் அவலம் அறிந்தான், மனம் பதறினான். பரமனிடம் முறையிடுவதற்கு கண்கண்ட சிவத்தலத்தை எல்லாம் தரிசித்துக்கொண்டு மன அமைதி இல்லாமல் கடைசியாக சம்புவனம் எனப்படும் 'திருவானைக்கா' தலம் வந்து தனித்திருந்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பிரம்மனை சோதித்து அருள்புரிய திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தமது பிரியாவிடையாகிய உமையம்மைக்கு ஆண் உருவம் தந்து, தான் பெண் உருவம் ஏற்று பிரம்மன் எதிரில் காட்சி அளித்தார். அய்யனின் திருவிளையாட்டினை தனது தவ வலிமையால் அறிந்த பிரம்மன் இருவரையும் வணங்கி தன் நிலையை கூறி பணிந்து வேண்டினான். வேண்டுவோர்க்கு வேண்டிய எல்லாம் கொடுக்கும் இறைவன், பிரம்மனின் குறையை நீக்கி மீண்டும் படைப்பு தொழில் புரியும் வல்லமையை அருளினார்.

திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காவிரிக்கு வடக்கே 2½ கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்து உள்ளது.

மேலும் செய்திகள்