அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்
|ராகு, கேது அருள் பெற விரும்புபவர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்து சுவாமியையும், தாயாரையும் வணங்கி அருள் பெறலாம்.
மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூரில் உள்ளது ஸ்ரீ அமிர்தநாராயண பெருமாள் கோவில். இங்குள்ள பெருமாளை வழிபட, வழிபட அமிர்த சக்திகள் மானுடத்தைச் சூழ்ந்து நின்று வளம் பெற வைக்கும். எப்போதும் ஆனந்தப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
பெருமாள் எல்லோருக்கும் அமிர்தமயமான வாழ்க்கையை வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டவர். இவரே இந்த அனுக்கிரகத்தைச் செய்பவர் என தல புராணம் சொல்கின்றது.
ராகு, கேது அருள் பெற விரும்புபவர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்து சுவாமியையும், தாயாரையும் வணங்கி அருள் பெறலாம் என ஜோதிடக்கலை வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த கோவில் ராகு, கேது சம்பந்தப்பட்ட வரலாற்றோடு தொடர்புடையதால் ராகு, கேது தோஷ நிவர்த்திக்காக இங்கே பெருமாளை வழிபடுவதும் ஆலய வளர்ச்சிக்காகப் பாடுபடுவதும் வெகு நன்மை பயக்கும்.
பஞ்சாங்கத்தில் காணும் அமிர்தயோக நேரம்' தோற்றுவிக்கப் பெற்ற தலம் இதுதான். பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தில் இருந்து அமிர்த நேர சக்திகளைப் பகுத்தி உலக மக்களுக்கு அமிர்தயோக நேரமாக அருளிய தலமே திருக்கடையூர். 60,70, 80 வயது நிறைவு போன்ற மங்கள நிகழ்ச்சிகளை திருக்கடையூர் அமிர்த வல்லித் தாயார் சன்னதியில் நடத்துதல் மிகச் சிறப்புடையது.
திருக்கடவூரில், புனிதநதி தவழும் பூமியில்தான் அனைத்து அமிர்த நீரோட்டங்களும் திகழ்கின்றன. இதனால்தான் முற்காலத்தில் பாரதத் திருநாட்டின் நீர்வளத் திற்கான மூல முதல் "அமிர்த சக்தி பூஜைகள்" இங்கு நிகழ்ந்தன.
திருமணங்களை ''திருக்கடவூர் அமர்தவல்லி தாயார் சன்னதியில் நிகழ்த்துவதை விட பெரும்பாக்கியம் வாழ்வில் வேறேதும் இல்லை" எனப் போற்றும் அளவிற்குப் பல மகரிஷிகளின் திருமண வைபவங்கள் நிகழ்ந்த திவ்யாமிர்தத் தலம்.
சகல விதமான திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்து, சுபமங்களகரமான திருமண பாக்கியத்தை வழங்குவதோடு திருமண வாழ்வில் கொந்தளிக்கும் சூழ்நிலைகளையும் தீர்த்து அமிர்தமய சாந்தம் பூரிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த தலம்.
அமிர்தநாராயண பெருமாள் புராணம் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் தலபுராணத்துடன் இணைப்புடையதே ஆகும்.
பண்டைய காலத்தில் தேவர்களும், அசுரர்களும் கூடித் திருப்பாற்கடலை கடைந்து பெற்ற அமிர்த கலசத்தை இவ்வூரில் (திருக்கடையூரில்) கொண்டு வந்து ஸ்தாபித்தனர். அசுரர்கள் நீராடி வருவதற்கு முன் திருமால் அமிர்தத்தை தேவர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க முயன்றபோது அம்மையின் அருளின்மையால் கலசத்தில் இருந்த அமிர்தமே சிவலிங்கமாகியது.
அதனால் திருமால், தனது திருமார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களைக் கழற்றிப் பீடத்தில் வைத்து அதனையே அம்மையாக கருதிப் பூஜிக்க, அந்த ஆபரணங்களிலிருந்த அம்பிகை அபிராமியம்மை என்ற திருநாமத்துடன் காட்சி கொடுத்து அமிர்தபானம் சித்திக்க அருளினாள். அதன் பிறகு திருமால் அமிர்த கலசத்தை அமிர்த புஷ்கரணித் தீர்த்தக் கரையில் வைத்து தேவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்.
இதன் மகிமையை அறிந்த அசுரன் ஒருவன் தேவனைப் போல் வடிவம் தாங்கி தேவர்களுடன் அமர்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டதை அறிந்த திருமால் தன் கையிலிருந்த சட்டுவத்தால் அசுரன் தலையை வெட்டினார். எனினும் அமிர்தம் உண்ட காரணத்தால் தலையும், உடலும் உயிரோடிருக்கக் கண்டு அருகில் வெட்டுண்டு கிடந்த பாம்பின் தலையை அசுரனின் உடல் மீதும் உடலை தலையின் மீதும் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்து அவற்றை 'ராகு கேது' என்னும் சாயா கிரகங்கள் ஆக்கினார் என்பது இத்தல புராணம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்க்கண்டேயனின் உயிர்பறிக்க எமன் முயலும்போது, மார்க்கண்டேயன் பரமேஸ்வரனை அணைத்துக் கொண்டான். அப்போது எமன் பாசக்கயிறைப் போட்டு மார்க்கண்டேயனையும், ஈசனையும் சேர்த்து இழுத்தான். இதனால் கோபமடைந்த ஈசன் எமனை காலால் உதைத்ததற்கு நீ சாட்சி என்று அமிர்த நாராயண பெருமாளை சுட்டிக்காட்டினார் என்று புராணத்தில் உள்ளது. இன்றும் திருக்கடையூரில் காலசம்ஹாரமூர்த்தி அமிர்த நாராயண பெருமாளை கையை நீட்டிக் காட்டும் கோலத்தில் இருப்பதைக் காணலாம்.