கடல்நீரை வற்றச் செய்த ஸ்தல சயன பெருமாள்
|மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாளையும், தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும்.
திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார். இந்த கடல் மல்லை எங்கிருக்கிறது என்கிறீர்களா?... பல்லவர் கால சிற்பங்கள் பொதிந்து கிடக்கும் மாமல்லபுரம்தான் அந்த காலத்தில் 'கடல் மல்லை' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
புண்டரீக மகரிஷி
முன்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது இந்த மாமல்லபுரம். இங்கு பல முனிவர்கள் தவம் இயற்றியுள்ளனர். அவர்களில் ஒருவர் மகாவிஷ்ணு மீது அதீத பக்தி கொண்ட புண்டரீக மகரிஷி. ஒரு முறை வனத்தின் அருகில் இருந்த குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர், மகரிஷியைக் கவர்ந்தது. புண்டரீகர் அந்த மலரைக் கொய்து, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க எண்ணினார்.
தன் எண்ணப்படியே மலரை பறித்துக் கொண்டு செல்லும் வழியில் கடல் குறுக்கிட்டது. பக்திப் பெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளினால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். இரவு பகலாகத் தொடர்ந்து இறைத்தும், கடல்நீர் வற்றவில்லை. புண்டரீகர், 'பெருமாளே! நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பு மெய்யானால், இந்த கடல்நீர் வற்றட்டும். எனக்கு வழி உண்டாகட்டும்' என்று வேண்டியபடி தொடர்ந்து கடல்நீரை இறைக்கத் தொடங்கினார்.
அப்போது அவர் முன் முதியவர் வடிவில் பகவான் மகாவிஷ்ணு தோன்றினார். அவர், 'முனிவரே! எனக்கு பசியாக இருக்கிறது. என்னால் சற்று தூரம்கூட நடக்க முடியவில்லை. எனக்கு ஏதாவது உணவு வாங்கித் தாருங்கள். நீங்கள் வரும்வரை உங்கள் பணியை நான் செய்கிறேன்' என்றார்.
கடல் நீர் வற்றியது
முனிவரும் முதியவரின் பசி போக்குவதற்காக அங்கிருந்து சென்றார். முதியவர் வேடத்தில் இருந்த மகாவிஷ்ணு கடல் நீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டார். கடல்நீர் வற்றியது. உணவு வாங்கிக்கொண்டு திரும்பி வந்த முனிவர், கடல் நீர் வற்றியிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டார். அங்கிருந்த முதியவரைக் காணவில்லை. அப்போது திருமால் சங்கு சக்கரதாரியாக, முனிவர் தனக்காக கொண்டு வந்த தாமரை மலரை தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு புஜங்க (வெற்று தரையில் படுத்தப்படி) சயனத்தில் காட்சிக் கொடுத்தார். அந்த காட்சியைக் கண்டு அகமகிழ்ந்து போனார்
புண்டரீக மகரிஷி.
இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். குருவாக அருள்வார் இந்த ஸ்தல சயனன். மேலும் கருவறையில் மூலவரின் பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி, பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளார்.
இத்தல உற்சவர் திருநாமம் 'உலகுய்ய நின்றான்' என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான். கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.
கல்கி அவதார காட்சி...
திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கலியுகத்தின் முடிவில், தான் மேற்கொள்ளப்போகும் கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்குக் காட்ட ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, 'கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே' என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
திவ்யதேசம்
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் 'ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி 'ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பாராயணம் செய்து வழிபட்டால் கடன் தொல்லை அகலும், வறுமை அகலும் என்பது ஐதீகம்.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடல் மிகச் சிறப்பு. 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. முதலில் ஸ்தல சயனப்பெருமாளுக்கு கடற்கரை அருகில் ஆலயம் எழுப்பினான் ராஜசிம்ம பல்லவன். பின்பு ஆலயம் கடல் அலையால் தாக்கப்படும் என எண்ணி, 14-ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னனான பாராங்குசன் தற்போது இருக்கும் இடத்தில் கோவில் கட்டினான்.
மாமல்லபுரம் ஸ்தல சயனப்பெருமாள் கோவிலில் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மாசி மகத்தன்று காலையில் பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருள்வார். பின்பு தீர்த்தவாரி நடைபெறும். புண்டரீக மகரிஷிக்காக திருமாலே கடல்நீரை இறைத்ததால் இது 'அர்த்த சேது' என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய பலனும், வறுமை விலகி செல்வமும் பெறுவர் என்பது ஐதீகம்.
சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 55 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்திற்கு முன்பாக மாமல்லபுரம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் மாமல்லபுரம் உள்ளது.