< Back
ஆலய வரலாறு
பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோவில்
ஆலய வரலாறு

பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில்

தினத்தந்தி
|
20 Sept 2024 12:26 PM IST

செவ்வாய்க் கிழமைகளில் இத்தல முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தால், சத்ருக்கள் பயம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் 'முத்துக் குமாரசுவாமி' என்னும் பெயரில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. இவற்றில் முதன்மையானது புள்ளிருக்குவேலூர் எனப்படும் வைத்தீஸ்வரன்கோவில் திருத்தலம். தஞ்சை மாவட்டத்திலுள்ள இத்தலத்து ஈசனை பறவை(புள்), ரிக்(வேதம்), வேல் ஆகிய மூன்றும் வணங்கி வழிபட்டதால் இப்பெயர் ஏற்படலாயிற்று. மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று இங்குள்ள முத்துக்குமாரசுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு தரிசிக்க பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயத்திற்கு வருவதை காணலாம்.

இதேபோல கடலூர் மாவட்டத்தில் முருகப்பெருமான், முத்துக்குமார சுவாமி பெயர்கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலமே முத்துக்கிருஷ்ணாபுரி என்று அழைக்கப்படும் பரங்கிப்பேட்டை. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதற்கு செவ்வாய்க் கிழமைகளில் இத்தல முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தால், சத்ருக்கள் பயம் விலகும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணமாகும்.

இந்த ஆலயம் முருகப்பெருமானின் கோவிலாக அடையாளம் பெற்றாலும், இங்கும் ஸ்ரீவிசுவநாதர்-ஸ்ரீவிசாலாட்சி என்ற பெயர்களுடன் சிவனும், சக்தியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அசுரனிடம் தோற்று தலைமை பதவியை இழந்த இந்திரனுக்கு அருள்புரிந்தவரே இந்த விசுவநாதர்.

கடல் நுரையால்..

முன்னொரு காலத்தில் நமுசி என்னும் அசுரன், ஈசனை வேண்டி தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சி அவனுக்குக் காட்சியளித்த சிவனிடம், 'எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது' என்று வரம் கோர சிவனும் அதன்படியே அருளினார். வரம்பெற்ற கர்வத்தில் அசுரன் தேவர்களை துன்புறுத்தினான். இந்திரனுடன் போரிட்டான். அப்போது இந்திரன் எய்த வஜ்ராயுதம், அசுரனை வீழ்த்தாமல் மறைந்து போனது. இதனால் பயந்துபோன இந்திரன், குயில் உருவம் எடுத்து பூலோகம் சென்றான். அங்கு அகரம் ஆதிமூலேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தான்.

பின்னர் முத்துக்கிருஷ்ணாபுரியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவமியற்றி வழிபட்டான். இந்திரனின் தவத்துக்கு இரங்கி காட்சியளித்த சிவன், 'பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி, கடல் நுரையை எடுத்து அசுரன் மீது வீசு' என்றார். அதன்படியே இந்திரன் கடல் நுரையை எடுத்து அசுரன் மீது வீசினான். சிவனருளால் கடல்நுரை உறுதிப்பெற்று ஆயுதத்தைவிட வலிமையானதாக மாறி அசுரனை வீழ்த்தியது. அசுரன் மாய்ந்து போனான். இந்திரன் தான் இழந்த தேவலோக பதவியை பெற்றான்.

இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே இந்த விசுவநாதர். முத்துக்குமாரசுவாமிக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கிய நிலையில் ஈசன் அருள்பாலிக்கிறார். அன்னை விசாலாட்சி அவருக்கு இடதுபுறமாக தென்முகம் நோக்கிய நிலையில் வீற்றிருந்து அருள்புரிகிறார். விசுவநாதருக்கு வஸ்திரம் அணிவித்து சம்பா சாதம் அல்லது பொங்கலை பிரசாதமாகப் படைத்து வேண்டிக்கொள்கின்றனர். விசாலாட்சி அம்பாளுக்கு வடை சர்க்கரை பொங்கல் படைத்து லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுகின்றனர்.

ஆலய அமைப்பு

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்க இந்தக் கோவில் எப்பொழுது, யாரால் கட்டப்பட்டது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. கொடி மரத்தையும், நந்தி மண்டபத்தையும் தாண்டியதும் விநாயகரை தரிசித்து உள்செல்ல எதிரில் முருகன் சன்னிதியும், இடதுபுறத்தில் ஸ்ரீவிசுவநாதர்-ஸ்ரீவிசாலாட்சி சன்னிதிகளும் அமைந்துள்ளன. பிரகாரத்தில் ஆதிவிசாலாட்சி சமேத ஆதிவிசுவநாதர், பாலசுப்ரமணியர் (சஷ்டி உற்சவத்தின் நாயகர்), ஸ்ரீநாகர் (நாகதோஷம், களத்திர தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் வழிபட வேண்டியவர்), இந்திரனால் வழிபடப்பட்ட மகாலட்சுமி சன்னிதி ஆகியவை உள்ளன. சிவன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவசண்டிகேஸ்வரர் ஆகியோரும், முத்துக்குமாரசுவாமியின் மகாமண்டபத்தின் கோஷ்டத்தில் துர்க்கை, குகசண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

மற்ற சிவாலயங்களில் இல்லாத தனிச்சிறப்பாக இந்த ஆலயத்தில், பிரம்மா உட்கார்ந்த நிலையில் சிஷ்யபாவத்துடன் காட்சியளிக்கிறார். இரண்டு சண்டிகேஸ்வரர்கள் ஒரே ஆலயத்தில் இடம்பெற்றிருப்பதையும் இந்த ஆலயத்தில் காணலாம். முத்துக்குமாரசுவாமி கருவறைக்கு அடுத்த அர்த்தமண்டபத்தில் நடராஜர் சபையும், மகாமண்டபத்தில் நவக்கிரகங்களின் சன்னிதியும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள மண்டபத்தில் சூரியன், பைரவர், நவவீரர்களின் சன்னிதி இடம்பெற்றுள்ளன.

விசுவநாதருக்கு நித்ய பூஜைகள் தவிர பிரதோஷ வழிபாடு, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் சோமவார வழிபாடு, மார்கழியில் தனுர்மாத பூஜை, மாசியில் மகா சிவராத்திரி நான்குகால பூஜை, மாசிமகத்தன்று சந்திரசேகர் தீர்த்தவாரி உற்சவங்கள் நடத்தப்பெறுகின்றன. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆடிப்பூரத்தின்போது சிறப்பு அபிஷேக ஆராதனையும், அமாவாசைதோறும் அர்த்தசாம பூஜையில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், வளர்பிறை அஷ்டமியில் துர்க்கைக்கு துர்க்காஷ்டமி அபிஷேக ஆராதனையும் நடத்தப்படுகிறது. ஆனி மற்றும் மார்கழி மாதங்கள் உள்பட வருடத்தில் ஆறுதடவை நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

முத்துக்குமார சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 7 மணியளவில் சத்ருசம்ஹார த்ருசதி அர்ச்சனையும், மாதந்தோறும் கார்த்திகை தினத்தன்று வைத்தீஸ்வரன்கோவிலில் அடியொற்றி சிறப்பு அபிஷேகமும், இரவு பரிகார உற்சவமும், வைகாசிவிசாக நாளில் சிறப்பு பூஜையும், கந்தசஷ்டியின்போது ஏழுநாள் உற்சவமும், தைமாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவமும் நடத்தப்பெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் போது மயில், இடும்பன், சூரிய பிரபை, சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி பவனி வருவார். ஏழாம் நாள் வள்ளி திருமணமும், ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் சுவேதநதி எனப்படும் வெள்ளாற்றில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஆலயத்தில் தினமும் நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது. சிதம்பரம், கடலூர் ஆகிய ஊர்களிலிருந்து வாகனத்தில் வருபவர்கள், சிதம்பரம்-கடலூர் சாலையில் புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக பரங்கிப்பேட்டையை அடையலாம். பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்தும் கோவிலை அடையலாம்.

மேலும் செய்திகள்