கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்: இன்றைய நாளின் சிறப்புகள் என்னென்ன..?
|மகா விஷ்ணுவின் 9-வது அவதாரமாக கிருஷ்ணர் பிறந்த தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை,
இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது. தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளை தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை வையகத்துக்கு உணர்த்தும் அவதாரமாகும்.
கிருஷ்ணரை தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் ஒருமித்து தங்கள் இல்லங்களில் கொண்டாடும் அற்புதமான நிகழ்வு. அத்தகைய சிறப்புக்குரிய கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாளின் சிறப்புகள்
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திங்கட்கிழமையில் வருகிறது. வழக்கமாக ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுவது உண்டு. கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக இந்த நாளில் அனைவரும் தங்களின் வீடுகளில் கிருஷ்ணர் எழுந்தருள்வதாக பாவித்து, பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யும் தெய்வ வழிபாட்டினால் கிருஷ்ணரின் அருள் மட்டுமல்ல பல தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
இதனால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் விலகும். உங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி விரதம் என்பது குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அருளும் திருநாளாகும். இந்த நாளில் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வீட்டில் சந்தான கிருஷ்ண ஹோமம் நடத்தினால் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கண்ணனே வந்து குழந்தையாக பிறப்பான் என்பது ஐதீகம். குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி, இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது.
ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 9 மணிக்கு பிறகு தான் ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. கிருத்திகை, முருகப் பெருமானுக்குரிய விரத நாளாகும். கிருத்திகை, சஷ்டி இரண்டுமே குழந்தை வரம் வேண்டுபவர்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். அதனால் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் கிருஷ்ணரின் அருள் மற்றும் முருகப் பெருமானின் அருளால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இந்த நாளுக்கு இருக்கும் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தேய்பிறை அஷ்டமி. இது காக்கும் தெய்வமான கால பைரவருக்கு உரிய வழிபாட்டு நாளாகும். தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் துன்பம், கடன், தடை, எதிரிகள் தொல்லை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
மேலும் இது சிவபெருமானை வழிபடுவதற்குரிய திங்கட்கிழமையில் வருகிறது. சிவ பெருமான், தீமைகள் மற்றும் பாவங்களை அழித்து, இன்பங்களை வழங்கக் கூடிய கடவுள். அதனால் இந்த ஆண்டு வரும் கிருஷ்ண ஜெயந்தி தவற விடக்கூடாத அற்புதமான நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் வழிபட்டால் கிருஷ்ணர், முருகன், பைரவர், சிவன் ஆகிய தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்கும்.
பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி வழிபாடு, பிரச்சனைகளை தேய்ந்து போக வைக்கக் கூடியது. அதிலும் இந்த ஆண்டு பல தெய்வங்களின் அருளை பெறுவதற்குரிய நாளும் ஒரே நாளில் ஒன்ற கூடி அமைந்துள்ளது.
இன்றும், நாளையும் பூஜை
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் மறுநாள் காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோவிலில் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மகா அபிஷேகமும், பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 27-ந்தேதி (நாளை) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.
கோவில்களை தாண்டி வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி உற்சகமாக கொண்டாடப்பட இருக்கிறது. தங்கள் குழந்தையை கிருஷ்ணராக பாவித்து பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்து மகிழ்வார்கள்.