சிலப்பதிகாரத்தின் சாட்சியாய் திகழும் கண்ணகி அம்மன் கோவில்
|தமிழ்நாடு-கேரளா எல்லைப்பிரச்சினை காரணமாக ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே கண்ணகி கோவிலில் வழிபாடு நடைபெறுகிறது.
சிலப்பதிகாரத்தின் தலைவி, கற்பில் சிறந்த கண்ணகிக்கு பல இடங்களில் வழிபாட்டு தலம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயங்களில், பகவதி அம்மன் என்று அழைக்கப்படும் தெய்வம் கண்ணகிதான் என்ற கூற்றும் நிலவுகிறது. கண்ணகிக்கு தமிழகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி மலையில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்பை பார்ப்போம்.
கண்ணகி வரலாறு
சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில், கோவலனுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தாள் கண்ணகி. கோவலனுக்கு யாழ் இசைப்பதில் அதீத ஆர்வம் உண்டு. அதே போல் ஆடல், பாடல்களிலும் விருப்பம் கொண்டவனாக இருந்து வந்தான். இந்த நிலையில் பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மகிழ்ந்தான். அவளிடம் தன் மனதை பறிகொடுத்தான். அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதால், கண்ணகியை மறந்து, மாதவியின் வீட்டிற்கு சென்று அவளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான்.
தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காகக் கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.
நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன் அந்தச் சிலம்புடன் அரண்மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.
அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான். அரசனைத் தொடர்ந்து அவனது மனைவியும் மன்னன் மார்பு மீது சாய்ந்து அழுதபடி தன் உயிர் நீத்தாள்.
தீக்கிரையான மதுரை
அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை. கற்பில் சிறந்த 7 பெண்களின் பெயரை உச்சரித்து, 'அவர்களைப் போல் நானும் கற்பில் சிறந்தவளாக வாழ்ந்தது உண்மையானால், இந்த மதுரை தீக்கிரையாகட்டும்' என்று சாபமிட்டாள். அவளது கற்பின் வலிமையால் மதுரை மாநகரமே நெருப்புக்கு இரையானது. அதில் தீயவர்கள் இறந்தனர்; நல்லவர்கள் உயிர் தப்பினர்.
பின்னர் கண்ணகி அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு, கண்ணகி தெய்வ விமானமேறி தேவலோகம் சென்றாள். இதனைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் கண்ணகியை, அம்மனாக நினைத்து 'இவளே நமது காவல் தெய்வம்' என்று கூறி வழிபடத் தொடங்கினர்.
சேர மன்னன் கட்டிய ஆலயம்
இந்த நிலையில் சேர மன்னனான சேரன் செங்குட்டுவன் அந்தப் பகுதிக்கு நகர்வலமாக வந்தான். அப்போது அந்தப் பகுதி மக்கள் மன்னனைச் சந்தித்து, கண்ணகி என்ற பெண்ணைப் பற்றியும், அவள் மனித உடலோடு, தேவ விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றதையும் தெரிவித்தனர். இதையறிந்த மன்னன் ஆச்சரியம் கொண்டான். அப்போது மன்னனுடன் இருந்த புலவர் சீத்தலை சாத்தனாரும், 'அரசே! அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் பற்றிய செய்தியை நானும் பாண்டிய நாட்டில் இருந்து வந்த தகவலால் அறிந்தேன். அந்தப் பெண்ணின் கணவன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நியாயம் கேட்கச் சென்ற அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த பாண்டிய மன்னன், அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிர் இழந்தான். மன்னன் இறந்ததும் அவனது மனைவியும் உயிர் துறந்தாள். பின்னர் மதுரையை தன் கற்பு நெறியால் எரித்து விட்டு, இவ்விடம் வந்து சேர்ந்திருக்கிறாள்' என்றார்.
அதைக் கேட்ட சேர நாட்டு மன்னனுக்கு மேலும் ஆச்சரியம் சேர்ந்தது. கற்பில் சிறந்தவளாகவும், மனித உடலுடன் தேவலோகம் செல்லும் அளவுக்கு உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாகவும் இருக்கும் கண்ணகிக்கு ஆலயம் கட்டுவது என்று மன்னன் முடிவு செய்தான். அவள் தேவலோகம் சென்ற அதே இடத்தில் கண்ணகிக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு, கேரளா மாநில எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது வண்ணாத்திப் பாறை என்னும் இடத்தில் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் இருக்கிறது.
சித்ரா பவுர்ணமி வழிபாடு
அந்த காலத்தில் இந்த மலையில் இருந்த வேடுவ மக்கள், கண்ணகியை சித்ரா பவுர்ணமி நாளில் சிறப்பாக வழிபாடு செய்து வந்துள்ளனர். அந்த வழக்கமே இன்றும் தொடர்கிறது. எல்லைப்பிரச்சினை காரணமாக ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இங்கு வழிபாடு நடைபெறுகிறது. அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று காலை 5 மணி அளவில் மலைப்பாதையை திறந்து, மாலை 5 மணிக்குள் மலையில் இருந்து இறங்கி விடும் வகையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கேரள மாநிலம் குமுளியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியான பளியங்குடியில் இருந்து சுமார் 6.6 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.
தமிழக-கேரள எல்லை முழுமையாக வரையறை செய்யப்படாத நிலையில், வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி கோட்டத்தை, கேரள தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் விழா நடத்த அனுமதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 1985 முதல் ஒவ்வொரு ஆண்டும், விழாவுக்கு முன்பே இருமாநில அரசு அதிகாரிகளும் விழா நடத்துவது தொடர்பாக கலந்து பேசி முடிவு செய்வார்கள்.
சிலப்பதிகாரத்தின் சாட்சியாக இருக்கும் இந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுகின்றனர். கண்ணகி கோவில் தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலை தமிழ்நாடு அரசு ஏற்று கோவிலை புனரமைக்க வேண்டும் என்று கோரி கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பராமரிப்பு இன்றி கிடக்கும் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு கோவிலை சீரமைத்துப் பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.