அரைக்காசு அம்மன்
|ஆதிகாலத்தில் இத்தலம் மகிழமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் மகிழவனம் என்று அழைக்கப்பட்டது.
சிவபெருமான் உமாதேவி, விநாயகர், முருகன் ஆகியோருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்கள் தமிழ் நாட்டில் நிறைய உண்டு அப்படிப்பட்ட தலங்களில் திருக்கோகர்ணமும் ஒன்று. புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். இத்தலம் செல்ல நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன ஆட்டோ வசதியும் உண்டு. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை பேருந்தில் செல்லும் போது, ஆலயத்திற்கு சற்று தொலைவில் இறங்கி நடந்தே சென்று விடலாம். இத்தலம் வெள்ளாற்றின் வடகரையிலும் புதுக்கோட்டை நகரின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளது.
தல வரலாறு
ஆதிகாலத்தில் இத்தலம் மகிழமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் மகிழவனம் என்று அழைக்கப்பட்டது. இத்தலத்தில் கபில முனிவரும் மங்கள முனிவரும் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.
ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரசபை கூடியது. தேவர்களும் முனிவர்களும் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். ஆனால் தேவ லோக பசுவான காமதேனு குறித்த நேரத்தில் வராமல் கால தாமதமாக வந்தது. இதனால் கோபமடைந்த தேவேந்திரன் காமதேனுவை பூலோகத்தில் காட்டுப்பசுவாக ஆகும்படி சாபமிட்டான். இதனால் வேதனைப்பட்ட காமதேனு இந்திரன் மனைவியான இந்திராணியின் வழி காட்டுதலால் கபில வனத்தில் காட்டுப்பசுவாக வந்து சேர்ந்தது. கபில வனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தை தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து பூஜித்தால் சாப விமோசனம் பெறலாம் என கபில முனிவரும் மங்கள முனிவரும் கூறினர்.அதன்படி அப்பசு கங்கை நீரை தன் காதுகளில் நிரப்பி கொண்டுவந்து மகிழவனேசுவரருக்கு தினம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அபிஷேகம் செய்த பின் எஞ்சிய நீரைத் தன் கொம்புகளால் பாறையைக் கீறி ஏற்படுத்திய பள்ளத்தில் விட்டு வந்தது.
அந்த பள்ளத்தில் நீர் நிறைந்திருக்கும் காட்சியை இப்போதும் காணலாம். நீர் நிறைந்த அந்த பள்ளம் கங்கா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
இறைவன் சோதனை
இந்தப் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் காமதேனு இறைவனை வழிபட்டு கொண்டு வரும் போது இறைவன் வேங்கை உருவம் கொண்டு அந்த பசுவின் முன்னே வந்து நின்றார். வேங்கையைப் பாத்த பசு திகைத்து நின்றது. வேங்கை பசுவைத் தின்னப் போவதாகப் பயமுறுத்தியது.அப்போது பசு வேங்கையிடம் இறைவனை வழிபட்டு தன் கடமைகளை முடித்து விட்டு திரும்பி வருவதாகவும் அப்போது தன்னைக் கொன்று பசியாறலாம் என்றும் வேங்கையிடம் சத்தியம் செய்தது. வேங்கையும் இதற்கு சம்மதம் தெரிவித்தது.
காமதேனு சொன்னபடியே சென்று தன் கடமைகளை முடித்து விட்டு திரும்பி வந்து வேங்கையின் முன் நின்றது. காமதேனுவின் கடமை உணர்வையும் கடவுள் பக்தியையும் கண்டு மனம் நெகிழ்ந்த வேங்கை உருவில் இருந்த இறைவனும் உமாதேவியும் காளை மீது அமர்ந்து காமதேனுக்கு காட்சி தந்தனர். காமதேனு சாப விமோசனம் பெற்றது.
காமதேனு பசு தன் காதுகளில் அபிஷேக நீர் கொண்டு வந்து வழி பட்டதால் இத்தலத்திற்கு திருக்கோகர்ணம். (கோ என்றால் பசு. கர்ணம் என்றால் காது என்று பொருள்) என்ற பெயர் ஏற்பட்டது.இத்தலத்தில் உள்ள ஆலயம் தான் அருள்மிகு பிரகதாம்பாள் ஆலயம்.
ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பெரிய கோவில் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது. நீண்ட அலங்கார மண்டபத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் இடது புறம் அன்னை பிரகதாம்பாள் சன்னதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் இன் முகத்துடன் அருள் பாலிக்கிறாள்.
அரைக்காசு அம்மன்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நாணயம் தயாரிக்கும் உரிமை வழங்கப்பட்டது. மன்னர் தன் மக்களையும் தன்னையும் காக்கும் பிரகதாம்பாள் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டார். அதை அம்மன் காசு என்று மக்கள் கொண்டாட, அந்தப் பெயர் நாளடைவில் மருவி அரைக்காசு என்றானது. அம்மனும் அரைக்காசு அம்மன் என்றே அழைக்கப்படலானாள். அந்த செப்புக்காசை வீட்டின் பூஜையறையில் வைத்து வேண்டிக்கொண்டால் களவு போன பொருள் கிடைக்கும். நினைத்த செயல் நடக்கும். வீட்டில் ஐஸ்வரியம் பெருகும் என நம்புகின்றனர் பக்தர்கள்.
இந்த ஆலயம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.மண்டபத்தின் நடுவே பிள்ளையாரும் தட்சிணாமூர்த்தியும் ஒரே சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இது அபூர்வமான அமைப்பு என்கின்றனர்.
அதையடுத்து கோகர்ணேஸ்வரரின் சன்னிதி உள்ளது. இங்கு வடதிசை நோக்கி ஒரு பிள்ளையாரும், தென்திசை நோக்கி கங்காதரரும் அருள்பாலிக்கின்றனர். கொடிமரம் வந்து படிகள் வழியே மேலே சென்றால் சுனை இருப்பது தெரியும். இதுவே கங்கா தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. ஆனால் சூரிய சந்திரர் இருவர் மட்டும் உள்ளனர். இந்த ஆலயத்தின் ஆதி மூர்த்தி மகிழவன நாதர். இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடி சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறுகின்றனர். இறைவியின் பெயர் மங்கள நாயகி. ஆலயத்தின் தல விருட்சம் மகிழமரம்.
திருவிழாக்கள்
இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. சித்திரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழாவும், வைகாசியில் வரும் வசந்த விழாவும், ஆனியில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழாவும், ஆவணி மூல நாளில் சிறப்புற நடக்கும் காமதேனுவுக்கு மோட்சம் கொடுத்த திருவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும்.
ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, சூரசம்காரவிழா, அன்னாபிஷேகமும், புரட்டாசியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவைத் தொடர்ந்து 10-ம் நாள் அம்பு போடும் விழாவும் நடைபெறும். சுனைக்கு கிழக்கில் ஜூவரேஷ்வரர் சன்னிதி உள்ளது. இவருக்கு இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து அர்ச்சித்தால் கடுமையான ஜூரம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்தும் விழாவும், மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி விழாவும், தை மாதத்தில் தைப்பூசத் திருவிழாவும், மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும், பங்குனியில் உத்திரத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெறுவதால் இந்நகர் திருவிழா நகரம் என்றே அழைக்கப்படுகிறது.தினசரி ஆறு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6.30 மணி முதல் பகல் 12 வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.திருமணம் நடந்தேற வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும் இந்த ஆலயத்திற்கு வருபவர்கள், கோவில் பள்ளியறையில் 48 நாட்கள் பால் வாங்கி வைத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. புதுக்கோட்டை செல்லும் போது நாமும் ஒரு முறை அரைக்காசு அம்மனை தரிசித்துவிட்டு வரலாமே.