சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்
|தங்களுக்கு நேரும் துயர் தீர சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், துயர் தீர்ந்ததும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அன்னை சமயபுரத்து மாரியம்மன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் எல்லா நாட்களும் திருவிழா நாட்களே! இங்கு தினந்தினம் ஆயிரமாயிரம் பக்தர்கள் அன்னையை தரிசனம் செய்ய வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆதிபராசக்தியின் உருவம்தான் மாரியம்மன்.
மகிஷாசுரன் என்ற கொடிய அரக்கனை நவராத்திரி காலத்தில் ஆதிபராசக்தியான துர்கா தேவி வதம் செய்து அழித்தாள்.
அந்த அசுரனின் கழுத்தில் சிவலிங்கம் இருந்ததாம். அந்த அசுரனை அழித்ததால் சிவனடியாரைக் கொன்ற தோஷம் பராசக்தியைப் பற்றியது. அந்த தோஷம் நீங்க சோழ நாட்டின் தலைநகரான உறையூரின் வடகரையில் வேப்ப மரங்கள் நிறைந்த காட்டில் அம்பாள் தவம் செய்தாள்.
கவுமாரி என அழைக்கப்பட்ட அந்த அன்னை சிவந்த நிறத்தில் இருந்தாள். மஞ்சள் நிற ஆடையுடன் மலர்க் குவியலுக்கு இடையே அமர்ந்திருந்தாள். உணவு உண்ணாமல் பல ஆண்டுகள் தவமிருந்தாள்.
அந்த தவம் பலன் தந்தது. அன்னையின் முகத்தில் இருந்த கோபம் தணிந்தது. சாந்தம் வந்தது. அமைதி ஏற்பட்டது. இப்படி சாந்த சொரூபிணியாக சமயபுரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறாள் என்பது புராண வரலாறு.
இந்த வரலாற்றின் நினைவாக இன்றும் சமயபுரத்தில் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
அன்று முதல் பங்குனி மாதம் கடைசி வரை அன்னை உண்ணா நோன்பு இருப்பாள். நோன்பு கலைந்தபின் கொடியேற்றம் நடக்கும். 9-ம் நாள் விழா கோலாகலமாக நடக்கும். 10-ம் நாள் சித்திரை முதல் செவ்வாயில் திருவீதி உலா நடைபெறும்.
அம்மனைப் பற்றி இன்னொரு வரலாறும் உண்டு.
ஸ்ரீரங்கம், ரங்கநாதர் ஆலயத்தில் வைணவி எனும் மாரியம்மன் எழுந்தருளியிருந்தாள். அந்த மாரியம்மன் மிகுந்த உக்கிரம் உடையவளாக இருந்தாள். அவளை பக்தர்கள் யாவரும் மிகுந்த பயபக்தியோடு வழிபட்டுச் சென்றார்கள்.
அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் உக்கிரம் கண்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய முயற்சி செய்தார்.
எனவே, மாரியம்மன் விக்ரகத்தை ஆட்களைக் கொண்டு அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்தார். அவர் சொன்னபடியே பணியாட்கள் அம்மனின் விக்ரகத்தை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி பயணமானார்கள். போகும் வழியில் ஓர் இடத்தில் அம்மன் விக்ரகத்தை வைத்துவிட்டு இளைப்பாறினார்கள்.
அவர்கள் இளைப்பாறிய அந்த இடம் தற்போது 'இனாம் சமயபுரம்' என்றும், இங்கு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் 'ஆதி மாரியம்மன்' என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த இடத்தின் தற்போதைய பெயர் 'ஆதி சமயபுரம்' என்பதாகும்.
இந்த இடம் சமயபுரம் ஆலயத்தின் அருகே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
அங்கு இளைப்பாறிய ஆட்கள் மீண்டும் அம்மனை எடுத்துக் கொண்டு தென் மேற்காகப் பயணமாகி, கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுப் போய்விட்டனர். அந்த இடத்தில் தான் உலக பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயம் உள்ளது.
அம்மனின் திருவுருவம் கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைக்கப்பட்டதால் அன்னை 'கண்ணனூர் மாரியம்மன்' என்றும் அழைக்கப்படுகிறாள்.
சமயபுரம் மாரியம்மனுக்கு சித்திரையில் சிறப்பான திருவிழா நடைபெறுவது உண்டு. இத்திருவிழாவின் 8-ம் நாள் அன்று அன்னை ஆதி சமயபுரம் சென்று, அங்கேயே தங்கி, மறுநாள் 9-ம் நாள் குதிரை வாகனத்தில் சமயபுரம் திரும்பும் வைபவம் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.
தவிர, அன்னை ஸ்ரீரங்கத்தில் இருந்ததை நினைவு கூறும் வகையில் தைப்பூசத் திருநாளன்று தன் தங்கை மாரிக்கு அரங்கநாதர் சீர்வரிசை அனுப்புவது இன்றும் நடைமுறை பழக்கத்தில் உள்ளது.
அன்னையின் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறைக்குச் செல்லும் வாயிலின் இருபுறமும் துவார சக்திகளின் அழகிய சுதை உருவங்கள் உள்ளன. வலதுபுறம் கருப்பண்ண சுவாமியின் சன்னதி உள்ளது.
கருவறையில் அன்னை அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
திருமுடியில் தங்கக் கிரீடம் அணிந்து, குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச அற்புதமாக காட்சி தருகிறாள் அன்னை.
அன்னைக்கு மொத்தம் எட்டு கைகள். கைகளில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவைகளைத் தாங்கி உள்ளாள்.
தனது இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்து இருக்கும் அன்னையின் வலது காலின் கீழ் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன.
மூலஸ்தான அம்மன் சுதை வடிவமானவள். எனவே, இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மாறாக உற்சவ அம்மனுக்கு தினமும் காலை 7 மணியளவில் அபிஷேகம் நடைபெறும்.
இங்குள்ள அன்னையின் திருமேனி உட்கார்ந்த கோலத்தில் மிகப்பெரிய திருமேனியாகும். இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்ப்பகிரகத்திலும் கிடையாது எனச் சொல்கின்றனர். அன்னையின் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டதால் அம்மனுக்கு 'மூலிகை அம்மன்' என்ற பெயரும் உண்டு.
கருவறையைச் சுற்றி உட்பிரகாரத்தில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு ஏற்றவாறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு குளுமை ஏற்படுத்த, இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புகிறார்கள்.
இங்கு மாவிளக்கு பிரார்த்தனை மிகவும் பிரசித்தம்.
தங்களுக்கு நேரும் துயர் தீர அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், துயர் தீர்ந்ததும் அன்னையைத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரை அவரது உறவினர்கள் சன்னதியில் படுக்க வைக்கின்றனர். அவர்கள் மேல் ஒரு சிறு வாழை இலையை போட்டு, பாதிக்கப்பட்ட உறுப்புகளின் மேல் மாவிளக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
இங்கு தினசரி உஷத்காலம், காலசந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, சாயரட்சை 2-ம் காலம், அர்த்த ஜாமம் என ஆறுகால பூஜைகள் நடை பெறுகின்றன.
காலை 5.30 மணிக்கு திறக்கப்படும் ஆலயம் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
இங்கு வேண்டிக் கொண்டு முடி காணிக்கை செலுத்துவதுடன், கோழி, ஆடு போன்றவற்றையும் வழங்குகின்றனர்.
தங்களுக்கு ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும், சங்கடங்களையும் தீர்த்து உரிய சமயத்தில் தங்களை காத்தருள்வாள் சமயபுரத்து மாரியம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.