நலம் தரும் பண்ணாரி அம்மன்
|பண்ணாரி ஆலயம் வந்து அம்பாளை மனமுருக வேண்டி கோவிலில் வழங்கப்படும் அம்மன் தீர்த்தத்தை பருகிட கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிறது.
அன்னை பராசக்தி எங்கும் நிறைந்த பொருளாய் கருதப்படும்போது அவளுக்கு பூரணி என்றும், ராஜராஜேசுவரி என்றும், முத்தொழில்கள் செய்யுமிடத்து பிராமினி, வைஷ்ணவி, ருத்ராணி என்றும், ஈஸ்வரனுக்கு ஒப்பாகும் போது அவளுக்கு துர்க்கை என்றும், கால சொரூபிணியாக கருதப்படும்போது அவள் காளி, பிடாரி, மகாமாரியம்மன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
ஒரே தெய்வம் வேறுபட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் எல்லாம் சக்தி மயமே. அவற்றில் கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் வீற்றிருக்கும் அருள்மிகு பண்ணாரி மாரியம்மனின் சக்தி வியப்பிற்குரியது.
இந்த கோவில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சத்திய மங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் பாதையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
இந்த இடம் காடுகள் அடர்ந்த தோப்பாக முற்காலத்தில் இருந்தது. அந்த தோப்பைச் சுற்றி பரிபாளையம், எம்மானூர், நஞ்சைய கவுண்டனூர், கோகரை, தொட்டமளம் ஆகிய ஊர்கள் இருந்தன.
இந்த கிராம மக்கள் தங்கள் மாடுகளை மேய்க்க இந்தக் காட்டுக்கு வருவது வழக்கம். அதில் ஒரு பசு மாட்டை அந்த பசுவின் சொந்தக்காரர் மாலையில் பால் கறக்க முற்பட்டபோது அதன் மடியில் பால் இல்லாததைக் கண்டார். தினமும் இப்படி நடக்கவே ஒரு நாள் மறைந்திருந்து மாட்டைக் கவனிக்கத் தொடங்கினார்.
அந்தப் பசு ஒரு புதர் அருகே சென்று தன் மடியில் இருந்த பால் முழுவதையும் தானாக சுரந்துவிட்டு வருவதைக் கண்டார். உடனே அந்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும், அதனருகே ஒரு லிங்கமும் இருக்கக் கண்டார். அதை அவர் ஊர் மக்களிடம் சென்று கூற, ஊர் மக்கள் யாவரும் அந்த அதிசயத்தைக் காண வந்தனர். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து தன்னை பண்ணாரி மாரியம்மனாய் கொண்டாடுமாறு அருள் வாக்கு கூற மக்களும் அவ்வாறே செய்தனர்.
கிராம மக்கள் அதே இடத்தில் பச்சிலையால் பந்தல் அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினர். பின்பு ஓலை கொண்டு கூரை வேய்ந்து அம்பிகையை வழிபட்டு வந்தார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து ஓடுகளால் ஆன கூரை அமைத்து பின் கோபுரத்துடன் கூடிய அம்பிகையின் கோவில் கட்டப்பட்டது.
பண்ணாரக்காடு என்ற ஊரிலிருந்து மைசூருக்கு செல்ல வனப்பகுதியில் பாதை உள்ளது. இந்த வழியே சில வியாபாரிகள் பொதி மாடுகளில் வியாபாரத்திற்கு வேண்டிய பொருட்களை ஏற்றிச்சென்றனர். அப்போது இரவு நேரம் ஆனதால் வழியில் இந்த இடத்தில் தங்கினார்கள். அப்போது ஒருவருடைய கனவில் அம்பாள் தோன்றி, 'அன்பர்களே! நான் உங்களுடைய துணையாய் வந்தேன். இங்கே பண்ணாரி மாரி என எழுந்தருளியுள்ளேன். உங்கள் வியாபாரம் செழிக்கும், கவலை வேண்டாம்' எனக் கூறியதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
அம்பிகைக்குப் பால் சொரிந்த பசுவின் சொந்தக்காரர் வெள்ளியம்பாளையம் தனகார போரப்பக் கவுண்டர் வம்சத்தினர். முதலில் தெய்வாவேசம் உண்டானது பீக்கர்பாளையம் நஞ்சப்பக் கவுண்டருக்கு என்றும் அதனால் அக்குடும்பத்திற்கு தேவராடிக் குடும்பம் என்ற பெயர் வழங்கி வருகிறதெனக் கூறுகின்றனர். இவர்கள் ஒக்கலியக் குடியான வம்சத்தினர்.
பண்ணாரி மாரியம்மன் குறித்த பழைய புராணமோ, சரித்திரமோ இல்லை. சிலர் கீர்த்தனை, வழி நடை சிந்து முதலியவை எழுதியுள்ளனர் என்று தெரிய வருகிறது.
அம்பிகைக்கு வழக்கம் போல ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவிற்கு அக்கினிக் குண்டம் வளர்த்து, அதில் பக்தர்கள் இறங்குவார்கள். குண்டத்திற்கு வனத்தில் மரங்களை வெட்டிக் கொண்டு வந்து போடுவது எப்போதும் வழக்கம். இந்த மரங்களைக் 'கரும்பு' என்றும், தீப்பொறிகளை 'பூ' என்றும் சொல்வார்கள்.
ஒருமுறை, காட்டு இலாகா ஆங்கில அதிகாரி ஒருவர் பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அந்த அதிகாரி குண்டத்துக்கு மரங்களை வெட்டக் கூடாது என்று தடுத்து விட்டார். அதனால் குண்டம் ஏற்படுத்த நேரம் ஆனதோடு திருவிழாவிற்கும் தடங்கலேற்பட்டது.
உடனே அந்த அதிகாரிக்கு வாந்தி, பேதி கண்டது. பதறிப் போன அந்த அதிகாரி ஆலயத்திலிருந்து தீர்த்தம் தருவித்து பருகிய பின் தன் தவறை உணர்ந்து தேவியைப் பணிந்து வணங்கினார். வாந்தி பேதி குணமானது. அவர் மனம் மாறி உடனே குண்டத்திற்கு 'கரும்பு' வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தார். திருவிழா வழக்கம் போல் நடந்தது.
இதேபோல் ஒரு ஆங்கில அதிகாரி பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். கோவிலில் நடக்கும் மேளதாளங்கள், ஆடல்-பாடல்கள் முதலியவைகள் அவருக்கு இடையூறாக இருந்தன. அவைகளை உடனே நிறுத்தும்படி கட்டளையிட்டார்.
ஆடல், பாடல்கள், மேளதாளங்கள் நிறுத்தப்பட்டன. உடனே பாம்பணிந்த இரு பெண்கள் மகுடக் குழல் பிடித்த கையினராய் அந்த அதிகாரி முன் தோன்றினர்.
அவ்வதிகாரி பயந்து தான் கட்டளை இட்டது பெருந்தவறென எண்ணி தேவியைப் பணிய, அப்பெண்கள் மறைந்தனர். மேளதாளங்கள் முழங்கின. திருவிழா இனிது நடந்ததாம்.
ஒருமுறை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் பழக கோவில் சுவற்றைப் பயன்படுத்தி உள்ளார். உடனே அவரது இரண்டு கண்களின் பார்வையும் பறிபோய் விட்டது. பிறகு தன் தவறை உணர்ந்த அந்த அதிகாரி அம்பிகையிடம் முறையிட அம்மனின் தீர்த்தத்தால் கண்ணொளி பெற்றார்.
தன்னை வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் அம்மனைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
பவுர்ணமி திருநாட்களிலும், வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளிலும், இன்னும் பிற விசேஷ காலங்களிலும் அலங்கார சொரூபிணியாக ஜொலிக்கும் அன்னை பண்ணாரி மாரியம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டிக் கொண்டால் வீட்டில் உள்ள தீமைகள் யாவும் அகன்று நலம் பிறக்கும்.
பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலுக்கு தெற்கில் கோயம்புத்தூர், கிழக்கில் ஈரோடு, தென்மேற்கில் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் இருந்து கோவிலுக்கு வர போக்குவரத்து வசதிகள் உள்ளன. சத்தியமங்கலத்திலிருந்து பேருந்து மூலம் அம்பிகையின் கோவிலை எளிதில் அடையலாம்.
இத்தலம் வந்திருந்து அம்பாளை மனமுருக வேண்டி கோவிலில் வழங்கப்படும் அம்மன் தீர்த்தத்தை பருகிட கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிறது. அதுமட்டுமல்லாது நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்களும் அம்பிகையின் அருளால் நலம் பெற்றுச் செல்கிறார்கள்.
கம்பீரமான ராஜ கோபுரத்துடன் காட்சித்தரும் திருக்கோவிலின் உள்ளே தெற்கு முகமாய் அமர்ந்து தரிசனம் தருகிறாள் பண்ணாரி அம்மன். பலகோடி புண்ணியங்கள் சேர்ந்திடவும், வினைகள் களைந்திடவும், பண்ணாரிக்கு வந்து மாரியம்மனைத் தொழுது வேண்டுவோருக்கு எப்போதும் அருள்புரிகிறாள் அன்னை பண்ணாரி மாரியம்மன்.