< Back
தலையங்கம்
தலைசிறந்த வீராங்கனைகளை உருவாக்குமா டபிள்யூ.பி.எல்.
தலையங்கம்

தலைசிறந்த வீராங்கனைகளை உருவாக்குமா டபிள்யூ.பி.எல்.

தினத்தந்தி
|
24 April 2023 12:18 AM IST

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் மும்பையில் நடைபெற்றது. அதிக தமிழக வீராங்கனைகள் இடம்பெற வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

காமன்வெல்த் நாடுகளில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். குறிப்பாக இந்தியாவில் நாடு முழுவதும் கிரிக்கெட் மோகம் பரவி கிடக்கிறது. சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்ல, ஐ.பி.எல்., டி.என்.பி.எல். போன்ற 20 ஓவர் வடிவிலான லீக் போட்டிகளையும் அதிகளவில் நம் நாட்டில் பார்க்கிறார்கள். இப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. தங்கள் ஊரில் கிரிக்கெட் போட்டி நடந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டுவதையும், டிக்கெட் கிடைக்காதவர்கள் டி.வி, செல்போன் முன் தவம் கிடப்பதையும் பார்க்கிறோம்.

சமீபத்தில், சென்னையில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க கர்ப்பிணிகளும் வரிசையில் நின்ற ஒரு புகைப்படம் மாலை மலரில் வெளியானது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் கிரிக்கெட்டுக்கு மவுசு அதிகம். ஐ.பி.எல். கிரிக்கெட் 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்கிறார்கள். வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் கொடுக்கப்படுகிறது. போட்டியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தங்களுக்கும் ஐ.பி.எல். போன்று கிரிக்கெட் போட்டி நடக்காதா? என்ற ஏக்கம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் நீண்ட காலமாக இருந்தது. எல்லா துறைகளிலும் கால்பதித்து சாதிக்கும் பெண்களுக்கும் ஐ.பி.எல். போன்று கிரிக்கெட் வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டனர்.

அவர்களின் நீண்டநாள் கனவு, ஒரு வழியாக கடந்த மாதம் நிறைவேறியது. 5 அணிகளுக்கு இடையிலான பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் மும்பையில் நடைபெற்றது. இதில் பெண் ரசிகைகள் மைதானத்திற்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். ஆண்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 விலையில் டிக்கெட் வழங்கப்பட்டது. பெரும்பாலான ஆட்டங்களுக்கு மைதானம் நிரம்பி வழிந்தது. இன்னும் சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான இறுதி ஆட்டத்தை ஒரு கோடி பேருக்கு மேல் இணையதளம், டி.வி. மூலம் கண்டுகளித்துள்ளனர். முதல் ஆண்டிலேயே பெண்கள் விளையாட்டு போட்டி ஒன்றை இத்தனை பேர் பார்த்தது ஒரு சாதனையாகும்.

இந்த போட்டியில் களமிறங்கி விளையாடும் 11 பேரில் 4 பேர் மட்டுமே வெளிநாட்டவராக இருக்கமுடியும் என்பது விதிமுறை. ஆனாலும் ஆதிக்கம் செலுத்தியது வெளிநாட்டு வீராங்கனைகள்தான். இந்த பெண்கள் ஐ.பி.எல்.-ல் அதிக ரன்கள் குவித்த டாப்-5 பட்டியலில் 4 பேர் வெளிநாட்டு மங்கைகள். விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் 5 இடங்களை பெற்றது அனைவரும் வெளிநாட்டவரே. ஆனாலும் இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்த போட்டியின் மூலம் நமது நாட்டு இளம் வீராங்கனைகளுக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அத்துடன் பல புதிய நுணுக்கங்களையும், நெருக்கடியை எப்படி திறம்பட கையாள்வது? என்பதையும் கற்று இருக்கிறார்கள். இது சர்வதேச போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கும், தலைசிறந்த வீராங்கனைகளாக உருவெடுப்பதற்கும் நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். போட்டியை ஒரே இடத்தில் இல்லாமல் மேலும் சில நகரங்களுக்கு குறிப்பாக சென்னைக்கும் கொண்டுவர வேண்டும், அதில் அதிக தமிழக வீராங்கனைகள் இடம்பெற வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்