விஸ்வகர்மா திட்டம் வேலைவாய்ப்பை பெருக்குமா?
|தற்போதைய நவீன காலத்தில், தொழில்கள் எந்திரமயமாக்கப்பட்ட பிறகு, பாரம்பரிய கைவினை தொழில்கள் நலிவடைந்து வருகின்றன.
தற்போதைய நவீன காலத்தில், தொழில்கள் எந்திரமயமாக்கப்பட்ட பிறகு, பாரம்பரிய கைவினை தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பாரம்பரிய தொழில்களுக்கு உயிரூட்ட, 77-வது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, "விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினை தொழிலில் நிபுணத்துவம் பெற்ற தனி நபர்கள், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பயனடையும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்கப்போகிறோம். சுமார் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் தொடங்கும் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் மூலம், கைவினை கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
அதன்படி, அவருடைய பிறந்த நாளான கடந்த 17-ந்தேதி, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதனால், நாடு முழுவதும் உள்ள தச்சு தொழிலாளர், படகு செய்பவர், இரும்புக் கொல்லர், கூடை-மிதியடி-துடைப்பம் செய்பவர், கயிறு திரிப்பவர், பாரம்பரிய பொம்மை தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், காலணி தொழிலாளர், சிற்பி, கல் உடைப்பவர், கொத்தனார், முடிதிருத்துபவர், பூமாலை தயாரிப்பவர், சலவைத் தொழிலாளர், தையல் தொழிலாளர், மீன் வலை செய்பவர் என 18 வகையான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் உள்ளடங்கிய 30 லட்சம் குடும்பங்கள், அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு பயன்பெறும்.
இவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஈட்டுறுதி இல்லாமல் கடன் வழங்கப்படும். 5 சதவீத சலுகை வட்டியில், 2 தவணைகளாக இந்த கடன் தொகை வழங்கப்படுகிறது. கடன் உத்தரவாத கட்டணத்தை மத்திய அரசாங்கமே வழங்கும். கைவினை கலைஞர்களுக்கு 5 நாட்கள் முதல் ஒரு வார காலம் வரை 40 அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும். விருப்பப்படுபவர்கள் 15 நாள் மேம்பட்ட பயிற்சியிலும் இணையலாம். பயிற்சியின்போது நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், உபகரணங்கள் வாங்கவும் ரூ.15 ஆயிரம் அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் கைவினை தொழில்களுக்கு ஒரு புத்துயிர் கிடைப்பதுடன், உற்பத்தி பொருட்களின் தரம் மேம்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழிவகுக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கான அரசு அறிவிப்பில், "விஸ்வகர்மாக்கள் தங்கள் கரங்கள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய திறன்களை வலுப்படுத்துவதையும், வளர்ப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது" என்று கூறியிருப்பது, ராஜாஜி கொண்டுவந்த குலத்தொழில் திட்டத்தை மீண்டும் உயிர் பெறச் செய்துவிடுமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, குறிப்பாக 18 வயது நிறைந்தவர்களை கல்லூரிக்கு செல்லவிடாமல், குலத்தொழிலையே செய்யத் தூண்டும் திட்டமிட்ட சூழ்ச்சி. இந்த திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்" என்று கூறியிருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இந்த 18 கைவினை தொழில்களையும் யாராவது ஒருவர் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். எனவே, ஆர்வமுடைய யாரும் இந்த திட்டத்தின் பயனை பெறலாம் என்று அறிவிப்பதே சாலப்பொருத்தமாக இருக்கும். இந்த பட்டியலில் நெசவு தொழில் உள்பட மேலும் சில கைவினை தொழில்களையும் சேர்க்கவேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.