< Back
தலையங்கம்
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாதனை படைக்குமா?
தலையங்கம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாதனை படைக்குமா?

தினத்தந்தி
|
25 July 2024 6:16 AM IST

கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்று புதிய கணக்கை தொடங்கி இருந்தது.

ஒலிம்பிக் போட்டிக்காக நாளை (26-ந்தேதி) உலகத்தையே பிரான்ஸ் நாடு வரவேற்க இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நாடு நடத்தும் 3-வது ஒலிம்பிக் போட்டி இதுவாகும். இதற்கு முன்பு 1900, 1924-ம் ஆண்டுகளில் நடத்தியிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை ஒரே நகரில் 3-வது முறையாக நடத்தும் பெருமையை பாரீஸ் பெற உள்ளது. இதற்கு முன்பு இதுபோல லண்டன் நகரில் 3 முறை ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து நடத்தி இருக்கிறது. தற்போது பாரீஸ் நகரம் அந்த வரலாற்றை சமன் செய்கிறது.

முதன் முதலில் கி.மு. 8-ம் நூற்றாண்டில் ஏதென்சில் ஒலிம்பியா என்ற இடத்தில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர், தொடர்ச்சியாக போட்டிகள் நடக்கவில்லை. 1896-ல் மீண்டும் அதே ஏதென்ஸ் நகரில் முதல் முதலாக நவீன ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக்கின் 33-வது போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது. மொத்தம் 32 விளையாட்டுகளில் தங்கப்பதக்கங்களுக்காக போட்டிகள் நடக்கிறது. 206 நாடுகள் பங்குபெறும் இந்த போட்டியில் 10,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள். உடல் ஊனமுற்றோருக்கான 22-வது பாரா ஒலிம்பிக் போட்டியும் இந்த போட்டிகளோடு நடக்கிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை காண ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், டெலிவிஷனிலும், பத்திரிகைகள் வாயிலாகவும் இந்த ஒலிம்பிக் போட்டியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும். இந்த ஒலிம்பிக் போட்டி வித்தியாசமானது. வழக்கமாக தொடக்க விழா மைதானத்தில்தான் நடக்கும். இந்த முறை பாரீஸ் நகருக்கு வெளியே சென் நதியில் தொடக்க விழா நடக்க இருக்கிறது. பிரமாண்டமாக 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு படகுகள் அணிவகுப்பு நடக்கிறது. இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் படகுகளில் தங்கள் தேசிய கொடியுடன் நின்று கலந்துகொள்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்திய வீராங்கனைகள் சேலை கட்டி உலகின் கவனத்தை ஈர்க்க இருக்கிறார்கள். கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்று புதிய கணக்கை தொடங்கி இருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை குவிக்க இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 117 இந்திய வீரர்கள், அதாவது 70 ஆண்களும், 47 பெண்களும் கலந்துகொள்கிறார்கள். 2036-ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த பிரதமர் நரேந்திரமோடி முயற்சி மேற்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் பதக்க பட்டியல் மிக முக்கியமாக உற்று நோக்கப்படுகிறது.

இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாதுகாப்பு பணிக்காக, அதாவது வெடிகுண்டை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட பல்வேறு மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த 10 மோப்ப நாய்களும், 17 பயிற்சியாளர்களும் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். 2023-ல் இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் இதுபோன்ற பணிகளில் இந்த நாய்கள் ஈடுபட்ட பாங்குதான் இப்போது ஒலிம்பிக் போட்டிக்கும் வரவழைப்பதற்கு காரணமாக அமைந்தது. மொத்தத்தில் இந்த ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு புகழை தேடித்தரும் போட்டியாக எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்