விலைவாசி எப்போது குறையும்?
|ரிசர்வ் வங்கி கவர்னரின் தலைமையிலான நிதிக்கொள்கை குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, பல்வேறு வகையான பொருளாதார கொள்கைகளை வகுக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னரின் தலைமையிலான நிதிக்கொள்கை குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, பல்வேறு வகையான பொருளாதார கொள்கைகளை வகுக்கிறது. இந்த நிதிக்கொள்கைக் குழு 6 உறுப்பினர்களைக் கொண்டது. ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில், இந்த ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தவும், குறைக்கவும் முடிவு மேற்கொள்ளப்படுகிறது. 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்த நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ ரேட் விகிதத்தை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த கூட்டத்தில், ரெப்போ ரேட் அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த மாதம் முதல் இப்போது வரை 5 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த 5 கூட்டங்களிலும் தொடர்ந்து இந்த வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 6.50 சதவீதமாகத்தான் இருக்கிறது. இதனால், வங்கிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிய வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் மீதான வட்டி உயரவில்லை என்பது மனநிறைவு அளிக்கும் விஷயமாகும். ஆனால், மூத்த குடிமக்கள் முதல் பொதுமக்கள் வரை வங்கிகளில் போட்டு இருக்கும் டெபாசிட்டுகளுக்கும் வட்டி உயரவில்லை என்பது ஒரு குறையாகும்.
பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வை அடிப்படையாக வைத்துத்தான் இந்த ரெப்போ ரேட் நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையில் கூட இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கணிக்கப்படுகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணவீக்கம், அதாவது விலைவாசி குறைந்து வருகிறது. நுகர்வோர் விலைவாசி குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதத்துக்கு கீழ் இருந்தால், அதுதான் உகந்த பாதுகாப்பான சூழ்நிலையாக கருதப்படுகிறது. ஜூலை மாதத்தில் இந்த விலைவாசி 7.4 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 5.55 சதவீதமாக இருந்தாலும், இந்த நிதி ஆண்டில் இந்த பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு மதிப்பிட்டுள்ளது.
ஆனால், அடுத்த நிதி ஆண்டு, அதாவது 2024-2025-ல் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களை உள்ளடக்கிய காலாண்டில் இந்த பணவீக்கம் 4 சதவீதத்தை தொடும் என்பது மகிழ்ச்சியான செய்தி, மக்களுக்கு அதிக செலவில்லாத வாழ்க்கைக்கான செய்தி என்று சொல்ல வைக்கிறது. அந்த நேரத்தில் வட்டி குறையலாம். ஆனால் இடையிடையே உயர்ந்து வரும் காய்கறி விலையால், இந்த மாதம் பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த நிதி ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று, முன்பு ரிசர்வ் வங்கி கணித்த நிலையில், இப்போது 7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கணிப்பை பார்த்தால், அடுத்த ஆண்டு நாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி, விலைவாசி கட்டுப்பாடு ஆகியவற்றில் நல்ல காலம் வருகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.