வெள்ள நிவாரணதொகை எப்போது கிடைக்கும்?
|தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் தாராளமாக நிதியுதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துவருகிறது.
இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசாங்கம் மாநில அரசுகளுக்கு குடும்ப தலைவராக இருக்கிறது. மாநில அரசுகளின் இன்ப துன்பங்களில் பங்கேற்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும். வரியை பொறுத்தமட்டில், மக்களிடம் மாநில அரசும் வரி வசூலிக்கிறது, மத்திய அரசாங்கமும் வரி வசூலிக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசாங்கம் வசூலிக்கும் வரியிலிருந்து, தமிழ்நாட்டுக்கு திரும்ப எவ்வளவு கிடைக்கிறது? என்பதை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிடும்போது, "ஒரு ரூபாய் வரியை வசூலித்து கொடுத்தால், அதில் 29 காசுதான் திரும்ப கிடைக்கிறது" என்று சொன்னார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் தாராளமாக நிதியுதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துவருகிறது. அந்த வகையில், சமீபத்தில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட சேதத்தை சீர்செய்ய தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணதொகை இன்னும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லையே என்ற குறை தமிழக அரசுக்கும், மக்களுக்கும் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மிக்ஜம் புயலால் 77 செ.மீ. மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மத்திய குழுவும் வந்து பார்த்தது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவியை தமிழக அரசு வழங்கியது.
அந்த நேரத்தில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டார். தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசாங்கம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதியளித்தார். அடுத்த சில நாட்களில், அதாவது டிசம்பர் 17, 18-ந்தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 200 ஆண்டுகளில் பெய்யாத பேய் மழை பெய்தது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட பாதிப்பின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் நிவாரண நிதியும், உதவிகளும் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.37,907 கோடி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை கேலோ இந்தியா போட்டியை தொடங்கிவைக்க அழைப்பு விடுக்க சென்றபோதும் வெள்ள நிவாரண நிதியை விரைவில் வழங்குமாறு கோரினார். அதன்பின்னர், டி.ஆர்.பாலு தலைமையில் எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த மாதம் 13-ந்தேதி சந்தித்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ள வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தினர். அமித்ஷாவும் ஜனவரி 27-ந்தேதிக்குள் தமிழ்நாட்டுக்கு நிவாரணதொகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே உறுதியளித்துவிட்டார். எனவே, 27-ந்தேதி என்ன, அதற்கு முன்னதாகவே இந்த தொகை வந்துவிடும் என தமிழகம் எதிர்பார்த்தது. நாம் கேட்ட ரூ.37,907 கோடியில் எவ்வளவு கிடைக்கும்? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இதுவரையில் இந்த தொகை விடுவிக்கப்படவில்லை. இதை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றம் முன்பு வரும் 8-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர். எனவே, உடனடியாக மத்திய அரசாங்கம் நிவாரண தொகையை கணிசமாக வழங்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.