தெருநாய் தொல்லைக்கு எப்போது விடிவுகாலம்?
|தமிழ்நாட்டில் தெருநாய்களின் தொல்லையும், நாய் கடிப்பு சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்நாட்டில் தெருநாய்களின் தொல்லையும், நாய் கடிப்பு சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை மாநிலங்களவையிலேயே மத்திய மந்திரி கூறியிருக்கிறார். மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினரான தம்பிதுரை கேட்ட ஒரு கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் பகேல் பதில் அளிக்கும்போது, "நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் தெருநாய் கடியால் 4 லட்சத்து 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் 27 லட்சத்து 59 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக மராட்டியத்தில் 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும், அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. நாய்க்கடிக்கு இருவகையான தடுப்பூசி குப்பிகள் ரூ.250, ரூ.350 விலையிலும் இருக்கிறது'' என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரையில் இந்த எண்ணிக்கை இவ்வளவு உயர்ந்து கொண்டிருப்பது கவலையளிக்கிறது. உடனடியாக தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 155 பேர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளனர். வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் 'ரேபிஸ்' நோய் மிக கொடூரமானது. ரேபிஸ் நோயால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சையே இல்லை. நிச்சயம் மரணம்தான். ஆனால் வெறிநாய் கடித்தவுடன் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் ரேபிஸ் நோய் வராமல் தடுத்துவிடமுடியும். உடனடியாக வேறு வேறு நாட்களில் 5 ரேபிஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால், இந்த நோயை கண்டிப்பாக தடுக்கமுடியும். எல்லா நாய் கடியுமே ரேபிஸ் நோயை கொண்டு வந்துவிடும் என்று கூற முடியாது. நாய் கடித்தால் உடனடியாக நடத்தையை கண்காணித்தாலேயே கண்டுபிடித்துவிடமுடியும். அது கடித்த காயத்தை தொடக்கூடாது. ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோயை தடுக்க உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். நாய் கடித்த இடத்தை 10 நிமிடங்களுக்குள் சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும். அதன் பின்பு மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சையை பெறவேண்டும்.
வீட்டில் வளர்க்கும் நாய்க்கு தடுப்பூசி போட்டுவிடமுடியும். ஆனால் பெருகிவரும் தெருநாய் எண்ணிக்கையால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தெருவில் மக்கள் நடமாடவே முடியவில்லை. காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செல்பவர்கள், குறிப்பாக முதியோர் செல்லும்போது தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு மேலே விழுவதும், பிராண்டுவதும், கடிப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. வயதானவர்கள் கையில் 'வாக்கிங் ஸ்டிக்' வைத்து இருந்தால், இந்த நாய்கள் தங்களைத்தான் அடிக்க வருகிறார்கள் என்று நினைத்து கடிக்கவருகிறது.
இதுமட்டுமல்லாமல், இந்த தெருநாய்கள் ரோட்டிலேயே மல ஜலம் கழிப்பதாலும், வாந்தி எடுப்பதாலும் நடந்துசெல்பவர்கள் அந்த அசிங்கத்தை மிதித்து செல்லவேண்டியநிலை ஏற்படுகிறது. சாலையும் அசிங்கமாகி விடுகிறது. மழை காலத்தில் சுகாதார கேடாக இருக்கிறது. இருசக்கர வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் தெருநாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி நடக்கிறது. தெருநாய் கடிப்பதால் கடிபட்டவர்களுக்கும் மருத்துவச்செலவு ஏற்படுகிறது. தெருக்களில் இருந்து இந்த சுற்றித்திரியும் நாய்களை அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். தெருநாய்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள், அதை தத்தெடுத்து வீட்டில் வளர்க்கவும் ஏற்பாடு செய்யலாம். தெருக்களில் சுற்றித்திரிவதைவிட அதற்கென்று ஒரு புகலிடம் வைத்தும் வளர்க்கலாம். மொத்தத்தில் தெருநாய் தொல்லைக்கு ஒரு நல்ல திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்தவேண்டும்.