மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?
|வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்ய தொடங்கும்போது குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் இன்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வருவார்கள்? என்ற கணக்கெடுப்பை நடத்திய பிறகுதான், அத்தனை பேர்களுக்கு உணவு சமைப்பார்கள். வீடுகளிலேயே இப்படி கணக்கெடுப்பு தேவைப்படும்போது எந்த திட்டங்களையும் தீட்டும் முன்பு மக்கள்தொகை எவ்வளவு? அதில் தகுதி படைத்தவர்கள் யார்-யார்? என்று அறிவதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கும் நிச்சயம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமாகும்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி வரையறை செய்வதற்கு என்றாலும் சரி, மக்களின் படிப்பறிவு, கல்வி, மொழி, மதம், சாதி, வேலை, புலம் பெயர்ந்தவர்கள் போன்ற விவரங்களையும், எத்தனை வீடுகளில் மின்சார இணைப்பு இருக்கிறது? சமையல் கியாஸ் இருக்கிறது? குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இருக்கிறது? என்பது போன்ற விவரங்களையும் அரசு தரவு தளத்தில் பதிவேற்றம் செய்து அதற்கேற்றார்போல, திட்டங்களை வகுக்க மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் கிடைக்கும் புள்ளி விவரங்களே முக்கிய தேவையாக இருக்கும். மிக முக்கியமாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வசதி குறைந்தவர்களுக்கு இலவச உணவு பொருள் அல்லது மானிய விலையில் அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென்றால், எத்தனை பேர் அந்த பிரிவின்கீழ் வருகிறார்கள்? என்ற விவரங்கள் தேவைப்படும்.
அதற்கு சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புதான் உதவிக்கரம் நீட்டும். இந்தியாவில் 1881-ம் ஆண்டு, முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெற்றிகரமாக எடுக்கப்பட்டு வந்தது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இப்போது நடைமுறையில் உள்ள திட்டங்களெல்லாம் அந்த கணக்கெடுப்பு அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2021-ம் ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. காரணம் கொரோனா. அந்த நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தமுடியாது என்பது சரிதான். ஆனால் இப்போது ஊரடங்கு அமலில் இல்லை. கொரோனா நன்றாக குறைந்து மக்கள் எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர்.
ரெயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சகஜ வாழ்க்கை திரும்பிவிட்டது. ஆக இனியும் கொரோனாவை சொல்லி மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதில் அர்த்தமே இல்லை. கொரோனாவால் மிகவும் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் 2020-ம் ஆண்டிலும், இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளில் 2021-ம் ஆண்டிலும், பிரேசிலில் கடந்த ஆண்டும் கணக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய இரு நாடுகளை தவிர மீதம் உள்ள 8 நாடுகளில் இந்தியாவில் மட்டுமே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இப்போது மத்திய அரசாங்கம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நிர்வாக எல்லைகளை திருத்தியமைக்கும் பணிகள் வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு 3 மாதங்களுக்கு பிறகுதான் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான நடைமுறைகளைத் தொடங்க முடியும். அந்த கணக்குகளை பார்த்தால் 2024-ம் ஆண்டில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும். ஆக 10 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்படவேண்டிய கணக்கெடுப்பு 13 ஆண்டுகளுக்கு பிறகுதான் எடுக்கப்படுகிறது. இனிமேலும் தாமதம் இல்லாமல் மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆயத்த பணிகளை மத்திய அரசாங்கம் உடனடியாக தொடங்கவேண்டும்.