பயம் காட்டும் இரட்டை அரக்கன்கள்!
|கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை கோர ஆட்டத்தை ஆடிவந்த கொடிய கொரோனா இப்போது குறைய தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியோடு இருந்த இந்திய மக்களுக்கு, சீனாவில் இப்போது கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பது கண்டு பயமாக இருக்கிறது. இப்போது பரவும் பி.எப்.7 வகை கொரோனா இதுவரை இருந்த கொரோனா வைரசைவிட மிக வேகமாக பரவும் சக்தி வாய்ந்தது.
கொரோனா என்ற தொற்றே 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியது. அதுபோல இப்போது அங்கு உருவெடுத்த பி.எப்.7 வகை கொரோனாவும் இந்தியாவுக்குள் காலெடுத்து வைத்துவிட்டது.
ஏற்கனவே, இந்தியாவில் இருக்கும் 'எக்ஸ்பிபி' ரக கொரோனாவும் இப்போது அடியெடுத்து வைத்து இருக்கும் பி.எப்.7 ரக கொரோனாவும், இரட்டை அரக்கன்கள் என்று அழைக்கப்படுகின்றன. முதல் அரக்கனை தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதால், அந்த அரக்கனின் ஆட்டம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இரண்டாவது அரக்கனை உள்ளே நுழையவிடக்கூடாது என்று தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளில் 2 சதவீதம் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்துவரும் அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் குஜராத்திலும், ஒடிசாவிலும் தலா 2 பேர் பி.எப்.7 கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்போது பெங்களூரு விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வந்த ஒரு பயணி உள்பட 11 பயணிகளும், பீகாருக்கு புனித பயணம் வந்த பயணிகளில் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 4 பயணிகளும், மியான்மரில் இருந்து வந்த ஒரு பயணியும், கொல்கத்தா விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பயணிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரொம்ப அதிர்ச்சியாக சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்க்கும், மகளுக்கும் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல துபாயில் இருந்து சென்னை வந்த 2 பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. இவர்களுக்கு பி.எப்.7 பாதிப்பா என்பதை கண்டுபிடிக்க அவர்களின் மாதிரிகள் பகுத்தாய்வு மையத்தின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த புதிய வகை கொரோனாவால் பெரிய அளவில் பரவல் இப்போது வரை இல்லை என்று வேலூரில் உள்ள தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். கொரோனா வராமல் தடுக்கும் முக்கியமான சாதனம் முககவசம்தான் என்று மிக விளக்கமாக தெரிவித்துள்ளார். திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பி.எப்.7-க்கு இங்கு இடம் இல்லை என்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கூட்டம் கூடும் இடங்களில் முககவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் முககவசத்தை இப்போது முதல் மாநிலமாக கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முககவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இல்லாவிட்டாலும், மக்கள் முன்னெச்சரிக்கையாக தாங்களே முன்வந்து பொது இடங்களுக்கு செல்லும்போதும், கூட்டம் இருக்கும் இடங்களிலும் முககவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.