< Back
தலையங்கம்
சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் என்ன ஆனது?
தலையங்கம்

சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் என்ன ஆனது?

தினத்தந்தி
|
25 Aug 2022 1:53 AM IST

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இன்னும் கவர்னரிடம் நிலுவையிலுள்ள 2 மசோதாக்களின் நிலைமை என்ன ஆனது? என்ற கேள்வி அனைவரிடமும் இப்போது எழுந்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17-ந்தேதி, டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்துக்கு நன்மை பயக்கும் பல கோரிக்கைகளை விடுத்தார். அதேநாளில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அறிவிப்பை வெளியிட்டு, அன்றே அதற்குரிய நியமன ஆணைகளை அவர்களிடம் வழங்கினார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஜி.ரவியும், வேலூரிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு டி.ஆறுமுகமும் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவிகாலம் 3 ஆண்டுகள். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இன்னும் கவர்னரிடம் நிலுவையிலுள்ள 2 மசோதாக்களின் நிலைமை என்ன ஆனது? என்ற கேள்வி அனைவரிடமும் இப்போது எழுந்துள்ளது.

பொதுவாக, ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிகாலம் முடிந்தவுடன், 3 பேர் கொண்ட தேர்வுக்குழுவினர், பல்கலைக்கழக துணைவேந்தராக விரும்புகிறவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து, அதில் 3 பேர்களைத் தேர்ந்தெடுத்து, வேந்தர் பொறுப்பிலிருக்கும் கவர்னருக்கு அனுப்புவார்கள். கவர்னர் அவர்களை நேர்முக பேட்டிக்கு அழைத்து, அதில் ஒருவரை துணைவேந்தராக நியமிப்பார்.

ஆனால், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களின்படி, தமிழ்நாட்டிலுள்ள 13 பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னருக்கு பதிலாக, மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. 1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம், 1991-ம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டம் ஆகியவற்றில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.

கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, மாநில அரசின் ஒப்புதலுடன் வேந்தரால் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவேண்டும். இதுபோல, பிறமாநில சட்டங்களுக்கு ஏற்ப, இந்த மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதாக அந்த மசோதாக்களில் கூறப்பட்டிருந்தது.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது பேசுகையில், "மாநில அரசின், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்தாலோசித்து, கவர்னர் துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ள நிலையில், அண்மைக்காலமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், கவர்னர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பதுபோல செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இச்செயல் மக்களாட்சியினுடைய தத்துவத்துக்கே விரோதமாக இருக்கிறது. ஒன்றிய-மாநில அரசுகள் குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்த பரிந்துரைகள், அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது" என்று பேசினார்.

இந்த மசோதாக்கள் அன்றே நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பப்பட்டது. தமிழக அரசு சார்பில் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று கவர்னரிடம் வேண்டுகோள் விடப்பட்டது. கவர்னர், தமிழக அரசிடம் சில கேள்விகளைக் கேட்டு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். "முதல்-அமைச்சர் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பது 1956-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு எதிரானது. ஏனெனில், இது நேரடி அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது" என்று குறிப்பிட்டிருந்ததாக கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில், இதுபோல கடிதம் கவர்னரிடமிருந்து வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஒரு முடிவு காணாத நிலையே இன்னும் இருக்கிறது.

மேலும் செய்திகள்