< Back
தலையங்கம்
வேளாண் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்
தலையங்கம்

வேளாண் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்

தினத்தந்தி
|
21 Feb 2024 5:15 AM IST

மண்வளத்துக்கு உயிரூட்டவும், மண்ணுக்கு சத்து உருவாக்கவும் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் வளம்சேர்க்கும்.

தமிழக அரசில் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் பல ஆண்டுகளாகவே இருந்தது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே அதாவது, 2021-ம் ஆண்டே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தநாளில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு நல்ல பலனை தந்துள்ளது. மிகவும் பாராட்டத்தக்க அளவில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 3-வது வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதற்காக, நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கலாம்.

முன்பெல்லாம் வேளாண்மைத்துறை என்ற பெயரில் மட்டும் இந்த துறை இயங்கி வந்தது. விவசாய வளர்ச்சி மட்டும் இருந்தால் போதாது, விவசாயிகளின் நலனும் மேம்பட வேண்டும் என்ற பெருநோக்குடன் இந்த துறையின் பெயரை வேளாண்மை-உழவர் நலத்துறை என மாற்றம் செய்து, விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். இந்த துறைக்கு இந்த ஆண்டு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா இந்த துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது திறமைக்கு சான்று சென்னையில் நடந்து முடிந்த மலர் கண்காட்சி.

நேற்று வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், 'முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற மிகவும் பயனளிக்கும் விளைச்சலை பெருக்கும் திட்டம் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது. விவசாயத்துக்கு ஆதாரமே சாகுபடி செய்யும் நிலத்தில் உள்ள மண்தான். இப்போதுள்ள சாகுபடி முறையில் மண்ணின் வளம் குறைந்துகொண்டே போகிறது. ஒரே பயிர்களை சாகுபடி செய்வதாலும், ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதாலும் மண் மலடாகி போய்க்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. மண்வளத்துக்கு உயிரூட்டவும், மண்ணுக்கு சத்து உருவாக்கவும் இந்த 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் வளம்சேர்க்கும்.

இதுபோல 'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற புதிய திட்டமும் இந்த வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர் என்று 5 முதல் 10 ஏக்கர் பரப்பில் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு போன்ற முக்கிய பயிர்களுக்கான நிலம் தயாரிப்பு, உயர்விளைச்சல் ரகங்களை பயன்படுத்தல் உள்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடிக்க வைத்து செயல் விளக்கங்களை மேற்கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளைநிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகளை தெரிந்துகொள்ளவும், தீமைசெய்யும் பூச்சிகளை தெரிந்து கொல்லவும் ஏதுவாக நிரந்தர பூச்சி கண்காணிப்பு திடல்கள் வயல்களில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கவும் இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர அனைத்து பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க உதவும் வகையிலும் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள் குறிப்பாக பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு வித்திடும் 80 அறிவிப்புகள் இருக்கின்றன.

மேலும் செய்திகள்