தமிழக வரலாற்றில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு ஒரு கரும்புள்ளி
|தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தர சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிமொழி ஆறுதலை அளித்துள்ளன.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் படுகொலை இன்றளவும் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் திடலில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பெருங்கூட்டம் திரண்டது. அப்போது ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர் 100 ஆங்கிலேய படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்துவந்து, எந்த எச்சரிக்கையையும் தராமல் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார்.
10 நிமிடங்கள் நீடித்த இந்த சரமாரி துப்பாக்கி சூட்டில் 1,650 ரவுண்டுகள், அதாவது ஒரு சிப்பாய்க்கு 33 குண்டுகள் என்ற வீதத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் ஏராளமானோர் உயிரிழந்தனர், எண்ணற்றோர் காயமடைந்தனர். அன்று ஜாலியன்வாலாபாக் போல, 'எங்களுக்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலை வேண்டாம்' என்று போராட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, மீண்டும் ஒரு ஜாலியன்வாலாபாக்காகிவிட்டதே தூத்துக்குடி என்று எண்ண வைக்கிறது.
'தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை வேண்டாம், அது எங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது' என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு காட்டுத்தீயாக கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 22-5-2018 அன்று மக்கள் பெருந்திரளாகக் கூடி ஊர்வலமாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது போலீசார் ஆங்காங்கு நின்று அவர்களை விரட்டி அடித்தனர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாத போலீசார், எந்தவித முன்னெச்சரிக்கையும் தராமல் சரமாரியாக காக்கை குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினர். இதில் 18 வயது இளம்பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர், 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் அப்போது தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சிகள் இடையே மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தர சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 187 ரவுண்டுகள் சுடப்பட்டுள்ளன. துப்பாக்கிசூட்டுக்கு முன்பு பின்பற்றப்படவேண்டிய நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு பயந்து தப்பி ஓடியவர்கள் பின்னந்தலையிலும், முதுகிலும் சுடப்பட்டனர்.
கலெக்டர் வளாகத்துக்கு வெளியே காவலர் சுடலைக்கண்ணுவை, காவல்துறை துணைத்தலைவர் கபில்குமார் சராட்கர் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டதும், அதில் உயிரிழப்பு ஏற்பட்டதும் வேதனைக்குரிய விஷயம். இவர் மட்டும் 17 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் என்பது உள்பட, பல சம்பவங்களை விவரித்து பரிந்துரைகளையும் நீதிபதி அளித்தார். ஏற்பட்ட ரணத்துக்கு மருந்து தடவுவதுபோல இந்த அறிக்கை அமைந்துள்ளது. இது மனநிறைவு என்றால், இந்த அறிக்கை மீது சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிகள் ஆறுதலை அளித்துள்ளன. இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரண உதவிகளை அறிவித்துவிட்டு, கலெக்டர், உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்; யார்-யார் குற்றவாளிகளோ அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்று அளித்த உறுதிமொழி, நிச்சயமாக இதுபோல ஒரு சம்பவம் தமிழகத்தில் இனி நிகழாவண்ணம் ஒரு எச்சரிக்கையை அளிப்பதுபோல இருக்கிறது.