இது நினைவிடம் அல்ல; நினைவாலயம்!
|செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பல காட்சிகள் டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்ற திரைப்பட பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர், கலைஞர் கருணாநிதி. 95 வயது வரை வாழ்ந்த அவர் 80 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தான் நின்ற 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வென்ற ஒரே தலைவர் அவர். இனம் காக்க, மொழி காக்க போராடினார். எதிர்கால தலைமுறைக்கும் வளமான வாழ்க்கையை வகுத்துத்தந்துவிட்டே அவர் இவ்வுலகைவிட்டு சென்றார்.
அவருக்கு அண்ணா நினைவிடத்துக்கு பின்னாலேயே நினைவிடம் அமைத்து அவர் ஆசையை நிறைவேற்றினார் அவரது மகனான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த நினைவிடத்தையும் சரித்திரம் சொல்லும் நினைவு சின்னமாகவும் மாற்றி இப்போது திறந்து வைத்துள்ளார். தன் சமாதியில், "ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்" என்று எழுதப்படவேண்டும் என்று வாழும்போதே கலைஞர் கருணாநிதி கூறியபடி, அந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அன்னை தமிழ்மொழியை செம்மொழி என்று மத்திய அரசாங்கம் எடுத்த முடிவை தெரிவித்து, இதற்கான முழு பெருமையும் கலைஞருக்கே உண்டு என்று சோனியாகாந்தி எழுதிய கடிதமும், கலைஞர் கருணாநிதியின் பதில் கடிதமும் நினைவிடத்தின் இருபுறமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவிடத்தின் கீழே நிலவறைப்பகுதியில் 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டு, அதில் 'அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும்' என்று கலைஞர் கருணாநிதி 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், 'தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல்' என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-10-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பல காட்சிகள் டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் கலைஞருடன் 'செல்பி' எடுத்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, திருவாரூர் - சென்னை கலைஞர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தத்ரூபமாக உள்ள ரெயில் பெட்டியில் அமர்ந்தால், 8 நிமிட நேரம் ஒரு ரெயில் பயண அனுபவத்தை பெற முடியும். முப்பரிமாண (3 டி) கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும்போது, திருச்சி ரெயில் நிலையத்தைக் கடந்ததும், கல்லக்குடியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கலைஞர் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்ததில் இருந்து வழி நெடுக அவருடைய முத்திரை பதிக்கப்பட்டுள்ள திட்டங்கள் செயலாற்றப்பட்டுள்ள ஊர்கள் வழியாக ரெயில் பெட்டி பயணிப்பது மகிழ்விக்கிறது. மலர் தோட்டங்கள் வழியாக செல்லும்போது நறுமணம் வீசுகிறது. நீர்வீழ்ச்சி அருகில் செல்லும்போது சாரல் துளிகள் நம் மீது விழுகிறது. ஒரு யானை தன் குட்டிகளோடு தண்டவாளத்தில் நின்று நமக்கு வணக்கம் சொல்வது வியப்பின் எல்லைக்கே கொண்டுசெல்கிறது. மொத்தத்தில் இப்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு, இது கலைஞர் நினைவிடம் அல்ல, நினைவாலயம் என்றே சொல்லலாம்.
கலைஞரோடு பயணிக்க வைக்கும் இந்த நினைவிடத்தை அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவர் எண்ணத்தை செயல்படுத்திய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகனும் பாராட்டுக்குரியவர்கள். தமிழுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் உயர்வுக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி, உறக்கமின்றி உழைத்த ஒரு உத்தம தலைவருக்கு இப்படி ஒரு புதுமையான, பிரமாண்டமான மெய்சிலிர்க்க வைக்கும் நினைவிடத்தை அமைத்தது சாலப்பொருத்தமுடையதாகும்.