இது முத்தான யோசனை!
|மதுப்பழக்கம் என்பது இப்போது புதிதாக வந்த பழக்கமல்ல. ஆதி காலத்தில் இருந்தே வேறு வேறு பெயர்களில் மது இருந்திருக்கிறது. ஆனால், குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று, இப்போது மதுவிலக்கு பிரசாரம் செய்வது போல, எல்லா காலங்களிலும், இலக்கியங்களில் குடிப்பழக்கத்தின் கேடு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை பல அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இதுபோல, கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சில்லரை மது விற்பனையை அரசு நிறுவனமான தமிழ்நாடு வாணிப கழகம், அதாவது டாஸ்மாக் நிறுவனம் கையில் எடுத்துக்கொண்டது. அந்த நேரத்தில், தமிழ்நாட்டில் 7,896 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்த கடைகள் மூலமாக விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர், ஒயின் போன்ற, இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதே தவிர, சாராய விற்பனை எங்கும் கிடையாது. இதுபோல, கள் விற்பனையும் இல்லை.
மது விற்பனைக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வை மூலம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. 25 ஆயிரத்துக்கு மேல் பணியாளர்கள் இருக்கிறார்கள். டாஸ்மாக் கடையை மூடினால், அரசின் பட்ஜெட்டில் ரூ.36 ஆயிரம் கோடி துண்டு விழும். அந்த நிலை ஏற்பட்டால், பல நல்ல திட்டங்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். மேலும், டாஸ்மாக் கடைகளை மூடினால், கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடிவிடும். ஏனெனில், குடித்து பழகியவர்களுக்கு, டாஸ்மாக் கடைகள் இல்லையென்றால், அதற்காக மதுப் பழக்கத்தை நிறுத்திவிட மாட்டார்கள். அவர்கள் பார்வை கள்ளச் சாராயம் பக்கம் போய்விடும். பல உயிரிழப்புகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், மதுப் பழக்கத்தை குறைக்க டாஸ்மாக் கடைகளை அரசு மூடி வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு ஆட்சிகளிலுமே டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக, இப்போது 4,829 கடைகள்தான் இருக்கிறது. ஜூன் மாதம் 500 கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலை இழந்த 2,444 பணியாளர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, வேறு கடைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது. இப்போது டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி என்று மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இனி 90 மில்லி லிட்டர் என்ற அளவில் டெட்ரா பேக்கில் மது விற்கவும் அரசு பரிசீலித்துக்கொண்டு இருக்கிறது. இது நல்ல யோசனை. குடிக்க செல்பவர்கள், வேறு வழியில்லாமல் குவார்ட்டர் பாட்டிலை முழுமையாக குடிக்காமல், அதில் பாதியை மட்டும் குடிப்பார்கள். பணமும் மிச்சமாகும். அதுபோல, புதிதாக மது குடிக்க வருபவர்களுக்கு, அந்த பழக்கத்தின் கேட்டை விளக்கிக்கூறி, வேண்டாம் இந்த பழக்கம் என்று சொல்லும் வகையிலும், வயதானவர்கள் மற்றும் உடல் நிலை மோசமாக இருப்பவர்கள் மது குடிப்பதை தடுக்கவும் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அமைச்சர் முத்துசாமி சொன்ன இந்த யோசனை மிகவும் முத்தான யோசனை. இதை பரிசீலனை என்பதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.