< Back
தலையங்கம்
The younger society will change its path due to addiction!
தலையங்கம்

போதையால் பாதை மாறும் இளைய சமுதாயம் !

தினத்தந்தி
|
15 Jun 2024 6:13 AM IST

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோதுதான், போதைப் பொருட்கள் அதிகம் ஊடுருவியதாக கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

போதைப் பொருட்களின் பயன்பாடு மனதையும், உடலையும் பாழ்படுத்துகிறது. மது குடிப்பது தவறு என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பைவிட மிக குறைவுதான். அதனால்தான் மதுவை தடை செய்யாத அரசு, போதைப்பொருள் கடத்தலை பெருங்குற்றமாக கருதி, கடுமையான தண்டனை விதிக்கிறது. கஞ்சா, அபின், கொகைன், எல்.எஸ்.டி., பெத்தடின் என போதைப் பொருட்களில் பல ரகம் இருக்கின்றன. இதுதவிர, மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோதுதான், போதைப் பொருட்கள் அதிகம் ஊடுருவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அசாம், மணிப்பூர், மேகாலயா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இருந்துதான் போதைப் பொருட்கள் கடத்திக்கொண்டு வரப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்படும் போதைப் பொருட்கள் கடல் மார்க்கமாகவும், உள்நாட்டில் இருந்துவரும் போதைப் பொருட்கள் ரெயில் மார்க்கமாகவும் தமிழகத்திற்குள் நுழைகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருட்கள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள். சமீப காலமாக, போதைப் பொருட்கள் தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. கோவை, சேலம் உள்பட பல மாவட்டங்களில், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அதிக அளவில் போதைப் பொருட்கள் பிடிபடுவதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள், "தமிழ்நாடு போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிவிட்டது" என்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால், போலீசாரின் தீவிர நடவடிக்கையால்தான் அது கண்டுபிடிக்கப்பட்டு வெளி உலகுக்கு தெரிகிறது என்ற வகையில், போலீசாரை நாம் பாராட்டவும் செய்யலாம்.

சமீபத்தில் இதுதொடர்பான ஒரு வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை போலீசாரின் நடவடிக்கையை பாராட்டியதுடன் காவல் துறைக்கு இன்னும் போதிய பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், 'போதைப் பொருள் கடத்தலுக்கு துணை நிற்கும் கருப்பு ஆடுகளான சில போலீசாரைக் கண்டுபிடிக்க ஒரு ரகசிய குழு அமைக்கவேண்டும்' என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே, சூட்டோடு சூடாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில், ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்தி, போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று ஆலோசனை நடத்தியது பாராட்டுக்குரியது.

மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "போதைப் பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை. முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும்" என்று சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும் மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எதிர்கால இளைஞர் சமுதாயத்தை போதையின் பாதையில் இருந்து மீட்டு, ஒளிமயமான எதிர்காலம் தெரியும் பாதையை காட்டும் பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கும், தமிழக அரசுக்கும் இருக்கிறது. எனவே, போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும், போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மூத்தோர் சமுதாயம் கோரிக்கை வைக்கிறது.

மேலும் செய்திகள்