இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 29 இந்தியர்களின் குரல்!
|29 இந்தியர்கள் குரலும், ஒரு தமிழ் பெண்ணின் குரலும் இங்கிலாந்து மக்களவையில் ஓங்கி ஒலிக்கப்போகிறது.
சென்னை,
நாடாளுமன்றங்களின் தாயாக கருதப்படும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், மக்களவை, பிரபுக்கள் சபை என்ற இரு அவைகள் இருக்கின்றன. 'ஹவுஸ் ஆப் காமன்ஸ்' என்று அழைக்கப்படும் மக்களவைக்கு, மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ தமிழ்நாட்டின் மக்கள்தொகையைவிட குறைவாகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8 கோடியே 39 லட்சமாகும். ஆனால், இங்கிலாந்தின் மக்கள்தொகை 6 கோடியே 76 லட்சம்தான். பரப்பளவை எடுத்துக்கொண்டாலும் உத்தரபிரதேசத்தைவிட சற்றே அதிகம்.
இங்கிலாந்து நாட்டில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 650 ஆகும். வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 60 லட்சமாகும். அங்கு கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில், 14 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த 'கன்சர்வேட்டிவ்' கட்சி என்று கூறப்படும் பழமைவாத கட்சி தோல்வி அடைந்தது. இக்கட்சி ஆட்சி செய்த காலத்தில் 5 பிரதமர்கள் அடுத்தடுத்து இருந்துள்ளனர். கடைசியாக 44 வயதான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக இருந்தார். இங்கிலாந்து நாட்டு மன்னரைவிட பணக்காரரான இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்திருக்கிறார். ரிஷி சுனக்கின் ஆட்சி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இருந்தபோதும், முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் எடுத்த முடிவு அவருக்கே பாதகமாக அமைந்துவிட்டது.
பழமைவாத கட்சிக்கும், தொழிலாளர் கட்சி என்று அழைக்கப்படும் லேபர் கட்சிக்கும் இடையே நடந்த போட்டியில், கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 412 இடங்களில் தொழிலாளர் கட்சியும், 122 இடங்களில் பழமைவாத கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை பழமைவாத கட்சி சந்தித்து இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால், உலகமே இந்த தேர்தல் முடிவை எதிர்பார்த்தது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 650 மக்களவை உறுப்பினர்களில் 242 பேர் பெண் உறுப்பினர்கள். அதில், 45 வயதேயான ரேச்சல் ரீவ்ஸ் நிதி மந்திரியாக பொறுப்பு ஏற்றார். ஒரு பெண் நிதி மந்திரியாக பதவியேற்றது இதுதான் முதல்முறை. 'சூப்பர் ஸ்டார்மர்' என்று இப்போது புதிய பிரதமர் ஸ்டார்மரை எல்லோரும் அழைக்கிறார்கள். புதிய மக்களவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 19 பேர் ஆளும் தொழிலாளர் கட்சியையும், 7 பேர் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியையும், 3 பேர் இதர கட்சிகளையும் சேர்ந்தவர்கள். இதில், லிசா நந்தி என்ற 44 வயது இந்திய வம்சாவளி பெண், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார் என்பதில் இந்தியாவுக்கு பெருமை.
இலங்கை தமிழரான உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். ஆக 29 இந்தியர்கள் குரலும், ஒரு தமிழ் பெண்ணின் குரலும் இங்கிலாந்து மக்களவையில் ஓங்கி ஒலிக்கப்போகிறது. பிரதமர் ஸ்டார்மர் ஆட்சியில் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையே உறவுகள் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷி சுனக் ஆட்சியில் மெதுவாக நகர்ந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இனி வேகமெடுக்கும். காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர பிரச்சினை என்பது அவரது நிலைப்பாடு. அவர் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மொத்தத்தில் இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவில் புதிய அத்தியாயம் பிறக்கவேண்டும்.