< Back
தலையங்கம்
ராணுவ வீரர்களை மகிழ்வித்த பிரதமர்!
தலையங்கம்

ராணுவ வீரர்களை மகிழ்வித்த பிரதமர்!

தினத்தந்தி
|
17 Nov 2023 1:17 AM IST

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தமிழ்நாட்டில் அன்றும், வட இந்தியாவில் 5 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பண்டிகை தீபாவளி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தமிழ்நாட்டில் அன்றும், வட இந்தியாவில் 5 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பண்டிகை தீபாவளி. இந்த நல்ல நாளில் வீடுகளில் மட்டும் மகிழ்ச்சி பொங்கவில்லை. நாடு முழுவதும் பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. இந்த காலகட்டங்களில், நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சில்லரை பணவீக்கம், அதாவது சில்லரை விற்பனை விலை 4 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து இருந்ததால், தீபாவளியையொட்டி பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு ஆர்வம் மிக அதிகமாக இருந்தது.

தீபாவளியையொட்டி, தனியார் நிறுவனங்களிலும், அரசுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் கிடைத்ததால், அந்த பணத்தை வைத்துக்கொண்டு ஆடைகள், பட்டாசுகள் உள்பட அனைத்து பொருட்களையும் வாங்குவது எளிதாக இருந்தது. தமிழக அரசு கலைஞர் உரிமைத்தொகையாக ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு வழங்கும் மாதம் ரூ.1,000-ம் ஏழை, எளிய குடும்ப பெண்கள் கையில் பணம் புரண்டோட வழிவகுத்தது. இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டும் அந்த குடும்பங்களின் தலைவிகள் வங்கி கணக்கில் ரூ.138 கோடியே 43 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் தீபாவளி விற்பனை மட்டும் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளது. இதில், தமிழ்நாட்டிலும் கணிசமான தொகைக்கு வியாபாரம் நடந்து இருக்கிறது. பிளாட்பார கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரையில், அனைத்து பொருட்கள் விற்பனையும் களை கட்டியது. ஆடைகள், பட்டாசுகள் மட்டுமல்லாமல், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், வைரம் மட்டுமல்லாமல், மோட்டார் வாகன விற்பனையும் அதிகமாக நடந்துள்ளது. மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

சென்னையில் சேலை விற்பனை மட்டும் 10 சதவீதம் அதிகரித்து இருந்ததாக, புகழ்பெற்ற ஒரு ஜவுளி கடையின் உரிமையாளர் கூறினார். கறிக்கோழி மட்டும் ரூ.315 கோடிக்கு மக்களால் வாங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ.633 கோடிக்கு நடந்துள்ளது. சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது. எல்லா குடும்பங்களிலுமே, அது எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சரி, தீபாவளிக்கு நிறைய ரகங்களில் பொருட்கள் விற்பனைக்கு வரும், தாங்கள் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம் என்ற உணர்வில், தீபாவளிக்கு மட்டுமல்லாமல், மற்ற பண்டிகைகளுக்கும், சுப காரியங்களுக்கும் இந்த நாட்களில் பொருட்கள் வாங்கிக் கொள்வார்கள். அந்த அமோக விற்பனை காரணமாக அரசுக்கும் வரியாக நிறைய வருவாய் கிடைத்து இருக்கும். இதனால் பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவு செய்ய முடியும்.

இந்த வகையில், வீடுகளில் மட்டுமல்லாமல், அரசுக்கும் வளம் கொழிக்கச் செய்த பண்டிகை தீபாவளி. 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் எல்லைப் புறங்களுக்கு சென்று ராணுவ வீரர்களுடனேயே தீபாவளி கொண்டாடும் பிரதமர் நரேந்திரமோடி, இந்த தீபாவளியன்று இமாசல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டிய லெப்சா பகுதியில் இருக்கும் ராணுவ முகாமுக்கு சென்று, அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி, அவர்களோடு தீபாவளி கொண்டாடி அவர்களையும் மகிழ்வித்தார். ஆக, இந்த தீபாவளி ராணுவ வீரர்கள் முதல், நாட்டினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாமல், அரசின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது.

மேலும் செய்திகள்