உலகத்தையே முடக்கிப் போட்ட 'மைக்ரோசாப்ட்' செயலிழப்பு!
|மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை 30 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிவிட்டது.
மனித வாழ்க்கையும் வாழ்வாதாரமும் இப்போது ஆன்லைன் சேவைகளையே சார்ந்துள்ளது. எல்லா சேவைகளும் கையால் எழுதுவதைத் தாண்டி, இப்போது டிஜிட்டல் சேவைகளுக்கே போய்விட்டன. எப்படி மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லையோ, அப்படி தகவல் தொழில்நுட்ப சேவைகள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை நடைமுறையே இல்லை என்றநிலை உருவாகிவிட்டது. அந்த அளவில், மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதில் இருந்து விமானத்தில் பறப்பது வரை தகவல் தொழில்நுட்பத்தின் மென்பொருள் சேவை இல்லாமல் எதுவும் இல்லை.
இப்படி வாழ்க்கையே மென்பொருள் சேவையை சார்ந்து இருக்கும் நிலையில், அதில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் உலகத்தையே முடக்கிப் போட்டுவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு நிகழ்வு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. தகவல் தொழில் நுட்ப சேவை வழங்குவதில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்சின் 'மைக்ரோசாப்ட்' நிறுவனம்தான் பிரதான இடத்தை வகிக்கிறது. 'மைக்ரோசாப்ட்'டின் 'விண்டோஸ்' மென்பொருளால்தான் உலகில் உள்ள கம்ப்யூட்டர்களில் 72 சதவீதம் இயங்குகிறது. இந்த 'மைக்ரோசாப்ட்'டில் தொழில்நுட்ப செயலிழப்பால் ஏற்பட்ட பாதிப்புதான் ஒரு நாளைக்கு மேலாக உலகையே புரட்டிப்போட்டுவிட்டது. இந்த செயலிழப்பால் இந்தியாவில் விமான சேவைகள், மருத்துவமனை சேவைகள், வங்கி, பங்குச்சந்தைகள், பல நிறுவன பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இண்டிகோ விமான நிறுவனத்தின் 192 விமானங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையங்களில் 'செக் இன்' சேவைகளும், டிக்கெட் வழங்குவதும், 'போர்டிங் பாஸ்' வழங்குவதும் கம்ப்யூட்டர் மூலம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், கையாலேயே எழுதி வழங்க வேண்டியநிலை உருவானது. நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.
இதனால் விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டன. பல விமான நிலையங்களில் டிஜிட்டல் பலகைகள் செயலிழந்ததால் விமானங்களின் வருகை - புறப்பாடு ஆகிய விவரங்கள் கையாலேயே எழுதப்பட்டு பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டன. மருத்துவத் துறையிலும் இதன் பாதிப்பு எதிரொலித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கூட பணிகள் முடங்கிவிட்டன. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை 30 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிவிட்டது.
இவ்வளவுக்கும் காரணம், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கிவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறுதான். இந்த நிறுவனம் 'மைக்ரோசாப்ட்', கூகுள் நிறுவனம் உள்பட உலகில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவைகளை வழங்கிவருகிறது. இதற்காக அந்த நிறுவனம் 'மைக்ரோசாப்ட்'டின் சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, 'பால்கன் சென்சார்' மென்பொருளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 'மைக்ரோசாப்ட் சர்வர்' முடங்கியது. இதனால் 'மைக்ரோசாப்ட் அசூர்', 'ஆபீஸ் 365' சேவைகளை பயன்படுத்தும் நிறுவன கம்ப்யூட்டர்கள் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. இதனால் 'விண்டோஸ்' பயன்பாடுள்ள கம்ப்யூட்டர்கள், 'லேப்டாப்'புகளில் நீலத்திரை தோன்றி செயலிழந்துவிட்டது என்ற எச்சரிக்கை எழுத்துகள் தோன்றின.
உலகமே செயலிழந்த நிலை இப்போது மாறினாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லிமாளாது. இதுபோன்ற நிலை இனி ஏற்படாத வகையில், இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அரசாங்கங்களும் இதுபோன்ற சேவைகளுக்காக ஓரிரு நிறுவனங்களின் தளங்களை மட்டும் சார்ந்து இருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.