< Back
தலையங்கம்
இந்தியாவின் மனிதநேயம்!
தலையங்கம்

இந்தியாவின் மனிதநேயம்!

தினத்தந்தி
|
10 Feb 2023 12:17 AM IST

துருக்கி, சிரியாவில் நடந்துள்ள துயரமான சம்பவத்தில், ஓடோடி உதவிசெய்ய சென்றுள்ள இந்தியா, தனது மனிதநேயத்தையும், மனிதாபிமானத்தையும் காட்டிவிட்டது.

துயரத்தில் பங்கு கொண்டு உதவுபவன்தான் உண்மையான நண்பன் என்பார்கள். அந்த வகையில், துருக்கி, சிரியாவில் நடந்துள்ள ஒரு துயரமான சம்பவத்தில், ஓடோடி உதவிசெய்ய சென்றுள்ள இந்தியா, தனது மனிதநேயத்தையும், மனிதாபிமானத்தையும் காட்டிவிட்டது. ஏற்கனவே, அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த நேரத்திலும், கடல் தாண்டி தன் உதவிக்கரத்தை நீட்டியது நினைவுகூரத்தக்கது.

உலகையே உலுக்கிய ஒரு கோர சம்பவம், மத்திய கிழக்கு நாடான துருக்கியிலும், சிரியாவிலும் நடந்துவிட்டது. இந்த இரு நாடுகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானது. பூமிக்கு அடியில் 24 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அப்படியே சில நொடிகளில் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுந்தன.

அதிகாலையில் நடந்த சம்பவம் என்பதால், தூக்கத்திலேயே 7 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். இதுவரை, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளிடையே சிக்கி தவித்தனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் இந்தியா உடனடியாக தன் கருணை கரங்களை நீட்டியது. அடுத்த சில மணி நேரங்களில், நிவாரணப் பொருட்கள், மீட்பு படையினருடன் ஒரு விமானம் துருக்கிக்கு புறப்பட்டது. வழக்கம்போல, இந்த விமானத்தையும் பாகிஸ்தான் தனது வான் எல்லையில் பறக்க அனுமதிக்கவில்லை. ஈரானை சுற்றித்தான் அந்த விமானம் சென்றது. அடுத்தடுத்து துருக்கிக்கு 4 விமானங்களிலும், சிரியாவுக்கு ஒரு விமானத்திலும் நிவாரண பொருட்கள், மருந்துகளுடன் மீட்பு படையினரும், மருத்துவ குழுவினரும், வாகனங்களுடன் சென்றனர்.

'நண்பர்களுக்கான செயல்திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த மீட்பு நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 101 வீரர்கள், ஆக்ராவிலுள்ள ராணுவ மருத்துவமனையிலிருந்து 99 பேர் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது மருத்துவர்கள் உள்ளடக்கிய மருத்துவ குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்காலிக மருத்துவமனை அமைத்து சிகிச்சையளித்து வருகிறார்கள். இந்த மருத்துவ குழுவினர் தங்களுடன் 'எக்ஸ்ரே' கருவிகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள் மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள் என அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கான பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, இடிபாடுகளிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்க இதற்கென பயிற்சி பெற்றுள்ள 51 வீரர்கள், மோப்ப நாய்களுடன் நேற்று முன்தினம் ஒரு படை துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிரியாவுக்கும் ஒரு விமானத்தில் 6 டன் எடை கொண்ட மருந்துப்பொருட்கள் மற்றும் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. துருக்கியில் 3 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில், பணி நிமித்தமாக சென்றிருந்த டேராடூனை சேர்ந்த விஜயகுமார் என்ற 36 வயது என்ஜினீயரை காணவில்லை. 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்தாலும், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

துருக்கியிலும், சிரியாவிலும் நடந்த நிலநடுக்க பாதிப்பிலிருந்து மக்களை மீட்க இந்தியா மேற்கொண்ட கருணை நடவடிக்கைகளை துருக்கி நாட்டு தூதர், "தேவையான நேரத்தில் வந்து உதவும் உண்மையான நண்பர்" என்று மனமுருக பாராட்டியுள்ளார். இந்தியாவின் இந்த மனிதநேய செயலை அங்குள்ளவர்கள் நன்றியோடு பாராட்டுகிறார்கள்.

மேலும் செய்திகள்