நாய்களால் தொல்லை
|வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் பாதுகாப்புக்காக ஒரு காவலாளி போல வளர்க்கப்படும் நாய்களும் உண்டு, ஒரு குழந்தையைப் போல செல்லமாக வளர்க்கப்படும் நாய்களும் உண்டு.
சென்னை,
நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்லும் மக்கள், "நாயை போல நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்" என்று மற்றவர்களிடம் அறிவுரையாக சொல்வார்கள். நாய் நன்றி உள்ளதுதான். ஆனால் யாருக்கு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். தன்னை வளர்ப்பவர்களுக்கும், உணவு அளிப்பவர்களுக்கும் மட்டும்தான் நன்றியை காட்டும். மற்றவர்களுக்கெல்லாம் அது எதிரிதான். நாயிலும் பல விதங்கள், பல சாதிகள் இருக்கின்றன. அதுபோல, அது வளரும் இடமும், வளர்க்கப்படும் நோக்கமும் வித்தியாசமானது.
ஆதரவற்ற தெரு நாய்களும் உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் பாதுகாப்புக்காக ஒரு காவலாளி போல வளர்க்கப்படும் நாய்களும் உண்டு, ஒரு குழந்தையைப் போல செல்லமாக வளர்க்கப்படும் நாய்களும் உண்டு. கிராமங்களில் தோட்டங்களுக்கு காவலாக நாய்களை வளர்க்கிறார்கள். வேட்டை நாய்களாகவும் பழக்கி வளர்ப்பதும் உண்டு. எந்த கட்டுப்பாடும் இன்றி சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால், ரோட்டில் செல்பவர்கள், குறிப்பாக நடைப்பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியது இருக்கிறது. எந்த நேரத்தில் நம் மீது பாயுமோ?, விரட்டுமோ?, ஆக்ரோஷத்தோடு குரைக்குமோ?, மேலே விழுந்து கடித்து விடுமோ? என்ற பயத்தோடுதான் செல்ல வேண்டியநிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து ஊர்களிலும் இருக்கிறது.
இப்போது தெரு நாயால் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்சினை கிளம்பியிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நுங்கம்பாக்கம் மாநகராட்சி பூங்காவில் சுரக்ஷா என்ற 5 வயது சிறுமியை இரு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. அவளை காப்பாற்ற வந்த தாயையும் அந்த நாய்கள் விட்டு வைக்கவில்லை. தலையில் உள்ள முடியோடு தோலையும் கடித்து குதறியதால் தனியாக வந்துவிட்டது. இதுதவிர உடலிலும் பல இடங்களில் காயங்கள். அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சையும் நடந்து இருக்கிறது. அந்த நாய்களுக்கு ரேபிஸ் நோய் இருந்ததா? என்று கண்காணிக்கப்படுகிறது.
அந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்குள் சென்னையில் மேலும் 5 பேரை வளர்ப்பு நாய்களும், நேற்று ராசிபுரத்தில் 3 பேர், பொன்னமராவதியில் 8 பேர் என 11 பேரை தெரு நாய்களும் கடித்து காயப்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நாய்கள் வளர்ப்பு மீது தனது பார்வையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சிறுமியை கடித்த ராட்வீலர் நாய் மிகவும் மூர்க்கத்தனமானது. இந்த நாய் உள்பட 23 வகை நாய்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று மத்திய அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை, டெல்லி, கர்நாடக ஐகோர்ட்டுகள் இடைக்கால தடை விதித்துள்ளது. இப்போது சென்னை மாநகராட்சி, "அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போட்டு லைசென்சு வாங்கவேண்டும். வெளியே கூட்டிக்கொண்டு வரும்போது ஒருவர் ஒரு நாயைத்தான் கழுத்தில் பட்டையுடன், வாயில் கவசத்தோடுதான் அழைத்து வரவேண்டும். சிறுவர்கள், முதியோர் இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது" என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் பிறப்பிக்கவேண்டும். நாய் கடித்து ரேபிஸ் நோய் வந்தால் நிச்சயம் மரணம்தான். எனவே, வளர்ப்பு நாய்கள் அனைத்துக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்யவேண்டும். தெரு நாய்கள் தொல்லையில் இருந்து ஒரு நிரந்தர தீர்வுகாண அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.