< Back
தலையங்கம்
வெள்ளம் வடிகிறது; சேதம் தெரிகிறது!
தலையங்கம்

வெள்ளம் வடிகிறது; சேதம் தெரிகிறது!

தினத்தந்தி
|
5 Jan 2024 1:49 AM IST

டிசம்பர் மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் மழைச்சேத மாதமாகிவிட்டது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 4-ந்தேதி ‘மிக்ஜம்’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

டிசம்பர் மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் மழைச்சேத மாதமாகிவிட்டது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 4-ந்தேதி 'மிக்ஜம்' புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 17, 18-ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு பெருமழை பெய்து பேரழிவை ஏற்படுத்திவிட்டது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களையும் அடைமழை விட்டுவைக்கவில்லை. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை இந்த பேய் மழை புரட்டிப்போட்டுவிட்டது. இன்னும் ஒருசில இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

வீடுகள், அதில் உள்ள உடைமைகளை இழந்து இன்னும் முகாம்களில், கருணை உள்ளம் படைத்த தன்னார்வலர்கள் வழங்கும் உணவை சாப்பிட வேண்டிய நிலைமைக்கு பல ஊர்கள் தள்ளப்பட்டுள்ளன. வீடுகள் மட்டுமல்ல, விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கி பயிர்களெல்லாம் அழுகிப்போய்விட்டன. இந்த வெள்ளம் மழையினால் மட்டும் ஏற்படவில்லை. ஆறு, குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளால் அங்கு இருந்து தண்ணீர் கடல்போல ஊருக்குள் பாய்ந்து ஓடியதால்தான் ஊருக்குள் இவ்வளவு தண்ணீர் தேங்கி நின்றது.

இவ்வளவு மழை பெய்துவிட்டது, இந்த ஆண்டு குடிதண்ணீருக்கும், விவசாயத்துக்கும் பஞ்சமே இருக்காது, தாராளமாக தண்ணீர் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நிறைய குளங்களில் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறிவிட்டதால், இப்போது அந்த குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு குளத்தை சொல்ல வேண்டுமானால், ஏரல் தாலுகாவிலுள்ள கருங்குளம் மிகப்பெரிய குளமாகும். தண்ணீர் இருந்தால் கடல்போல காட்சியளிக்கும். அங்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரெல்லாம் வெளியே பாய்ந்து ஓடிவிட்டதால், இப்போது தண்ணீர் இல்லாமல் கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 515 குளங்களில் 720 உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தூத்துக்குடியில் வெள்ளப்பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட நேரத்தில், தூத்துக்குடியை அடுத்த கோரம்பள்ளத்தில் குளம் உடைப்பு ஏற்பட்ட நிலையை ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் கோரம்பள்ளம் குளம் 6 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. நீண்டநாட்களாக தூர்வாரப்படவில்லை. மழை வெள்ளம் வந்தபோது, அதிகாரிகள் மதகுகளை திறந்துவிட காலம் தாழ்த்தியதால்தான் இந்த குளத்தில் உடைப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தனர். மழை பெய்த இடங்களில் இருந்த குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளால், விளைநிலங்களில் நீர் புகுந்தது. இதனால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 37 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்களெல்லாம் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. ஒரு லட்சத்து 175 விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், 34 ஆயிரத்து 2 ஹெக்டேர் தோட்டப்பயிர்களும் பாழாகிவிட்டன. இந்த நிலங்களில் எல்லாம் மீண்டும் சாகுபடி தொடங்குவதற்கு பல இடங்களில் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லை. அடுத்துவரும் மழைநீரை தேக்கி வைக்கவேண்டும் என்றால், உடனடியாக போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட அனைத்து குளங்கள், நீர்நிலைகள், ஆற்று உடைப்புகளை சீர்செய்திடவேண்டும். இதுதவிர முக்கிய வேலையாக அனைத்து நீர்நிலைகளிலும் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினால்தான் குளிக்கவும், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் குளத்துநீரை பயன்படுத்த முடியும். இதற்கு தனியாக சிறப்பு திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்