அமைதி பூக்கள் மலரும் தேர்தல்!
|முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால், பிரதமர் நரேந்திரமோடி மட்டும் 9 முறை இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்.
சென்னை,
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்களாட்சியை மலரச் செய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுமைக்கும் நாடாளுமன்ற தேர்தலும், மாநில வாரியாக சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 17 முறை நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்துள்ளது. 18-வது மக்களவைக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1-ந்தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. பதற்றமான மாநிலங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் தேர்தல் நடக்கிறது.
ஓட்டுபோட காட்டிய ஆர்வத்தை பார்த்தால், கடந்த 2 தேர்தல்களில்தான், அதாவது 2014 தேர்தலில் 66.4 சதவீதமும் 2019 தேர்தலில் 67.4 சதவீதமும் என அதிகமாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 2019-ல் தமிழ்நாட்டில் இந்திய சராசரியைவிட அதிகமாக 73.3 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து சாதனை படைத்திருக்கிறது. 2024 தேர்தலில், தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆகும்.
தமிழ்நாட்டில், 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 76 பேர் தான் பெண்கள் என்பது பெரிய குறையாக இருக்கிறது. வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் 78 சதவீதம் பேர் 31 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். 25 வயது முதல் 30 வயது வரையுள்ள 74 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். 35 சதவீத வேட்பாளர்கள் 40 வயதுக்கு குறைந்தவர்கள். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், அ.தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் ஜெயவர்தன், சிங்கை ஜி.ராமச்சந்திரன், பி.விக்னேஷ், ஜி.பிரேம்குமார் போன்றோர் இந்த வயது வரம்புக்குள் இருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், விவசாயத்தை தொழிலாகக் கொண்ட 150 பேர், தொழிலதிபர்கள் என்ற வரிசையில் ஏறத்தாழ 200 பேர், 127 வக்கீல்கள் என்று இந்த முறை வேட்பாளர் பட்டியலில் அனைத்து தரப்பினரும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால், பிரதமர் நரேந்திரமோடி மட்டும் 9 முறை இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசார பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் எப்போதும் வன்முறை எதுவும் இன்றியே தேர்தல் நடந்திருக்கிறது. அது இன்றைய வாக்குப்பதிவிலும் தொடரும் என்று நம்பப்படுகிறது. "விரலில் வைத்த கருப்பு மை நகத்தை விட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்" என்று கவிஞர் வைரமுத்து கூறியதற்கேற்ப இன்று அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.