< Back
தலையங்கம்
மக்களவையில் கணக்கை தொடங்கிய பா.ஜனதா
தலையங்கம்

மக்களவையில் கணக்கை தொடங்கிய பா.ஜனதா

தினத்தந்தி
|
16 May 2024 7:12 AM IST

சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியிடாமலேயே தேர் ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

தேர்தல் வந்துவிட்டாலே பல அதிசயங்கள் நடக்கும். 'நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ' என்று எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள், 'இன்று முதல் நீ வேறோ நான் வேறோ' என்று கைகோர்த்து கூட்டணி அமைத்துக்கொள்ளும். இப்போது 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி நடந்து முடிந்தது. 2-ம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் இருக்கும் 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந் தேதி நடந்தது.

கடந்த 7-ந் தேதி 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இதில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் அடங்கும். ஆனால், அந்த மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியில் ஒரு அதிசயம் நடந்தது. அந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியிடாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இதன் மூலம் 18-வது மக்களவையில் பா.ஜனதா தன் முதல் வெற்றிக்கணக்கை தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் போட்டியிட பா.ஜனதா, காங்கிரஸ் கட்சி உள்பட 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பரிசீலனையின்போது, இதில் பா.ஜனதா வேட்பாளரின் மனுவை தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் மனுவில் முன்மொழிந்தவர்கள், அந்த ஆவணத்தில் போடப்பட்டு இருந்தது தங்கள் கையெழுத்து அல்ல என்று தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி எழுத்து மூலமாக தெரிவித்துவிட்டனர். காங்கிரஸ் வேட்பாளரின் டம்மி வேட்பாளரும் அதையே தெரிவித்தார். 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். அதில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் இருந்தார். ஆக, களத்தில் யாரும் இல்லாத நிலையில், பா.ஜனதா வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சரித்திரத்தை படைத்தார். இதேபோல கடந்த 13-ந்தேதி நடந்த 4-வது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் விலகியதால், சுயேச்சைகள் மட்டும் எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அங்கு பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

12 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் அவர் மனைவி டிம்பிள் யாதவ் 2012-ல் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 35 பேர் இதுபோல போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 'சூரத்தில் நடந்தது நல்ல ஜனநாயகம் இல்லை' என்ற கருத்தும் இப்போது பேசப்படுகிறது. சூரத் தொகுதி பா.ஜனதாவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. 1989-ல் இருந்து இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும் பா.ஜனதாவே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள், டம்மி வேட்பாளர் அனைவரும் தங்கள் கையெழுத்து இல்லை என்று சொன்னதும், சுயேச்சைகள் ஒட்டுமொத்தமாக பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தங்கள் மனுக்களை வாபஸ் வாங்கியதும் மர்மமாகவே இருக்கிறது. ஜனநாயகத்தில், தேர்தலில் போட்டியிருக்கவேண்டும். மக்கள் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை வேண்டும். அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் இல்லை.

மேலும் செய்திகள்