< Back
தலையங்கம்
உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா!
தலையங்கம்

உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா!

தினத்தந்தி
|
19 March 2024 6:20 AM IST

முதல் நாடாளுமன்ற தேர்தலின்போது 1951 செப்டம்பர் முதல் 1952 பிப்ரவரி வரை 5 மாதங்கள் தேர்தல் நடந்தது.

சென்னை,

17-வது நாடாளுமன்றம் முடிந்து, வருகிற ஜூன் 16-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இந்த நிலையில், 18-வது மக்களவையை தேர்ந்தெடுக்க 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19-ந்தேதி முதல், 7 கட்டங்களாக அதாவது, ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து இதுவரை நடந்த 17 தேர்தல்களில், தேர்தல் நடைமுறை அதிக நாட்கள் இருப்பது இது 2-வது முறை ஆகும். முதல் நாடாளுமன்ற தேர்தலின்போது 1951 செப்டம்பர் முதல் 1952 பிப்ரவரி வரை 5 மாதங்கள் தேர்தல் நடந்தது. இப்போது 7 கட்டங்களாக 47 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்தலில் ஓட்டுப்போட 96.80 கோடி வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். அதில் 1.80 கோடி வாக்காளர்கள் 18 வயது முதல் 19 வயதுடைய முதல் வாக்காளர்கள். 19.74 கோடி பேர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள். ஆக, மொத்த வாக்காளர்களில் 5-ல் ஒரு பங்கு 30 வயதுக்கு குறைவானவர்கள்.

இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா, ரஷிய நாடுகளின் மொத்த ஜனத்தொகையைவிட அதிகம் ஆகும். அந்த வகையில் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக இந்திய மக்களுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் பெருமை சேர்க்கிறது. தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19-ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து, ஜூன் 4-ந்தேதி அனைவருக்கும் முடிவு அறிவிக்கப்படும்போது, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும் தெரியவரும். மற்றொரு சிறப்பு, 85 வயதுக்கு மேற்பட்ட 81.88 லட்சம் பேரும், 40 சதவீதத்துக்கு மேல் உடல் ஊனமுற்றவர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வீட்டில் இருந்தே ஓட்டுப்போடும் வசதி இந்த தேர்தலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2014, 2019-ல் நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைத்தது. 2014-ல் வெற்றி பெற்றபோது, ஒரு சாதனையுடன், அதாவது, 1984-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஒரு தனிக்கட்சி முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவுக்கு பின்னுக்கு தள்ளியது. இந்த முறை நரேந்திரமோடி வெற்றி பெற்று பிரதமரானால், ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் என்ற பெருமையை பெறுவார். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவிட்டது. நரேந்திரமோடி எங்கு சென்றாலும், 'பா.ஜனதா 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேலும் வெற்றியை பதிவு செய்யும்' என்று அடித்து சொல்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 'ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு மக்களுக்கு கொடுக்கப்படுவது இந்த தேர்தல்தான்' என்கிறார். ஆக, இவர் சொல்வது சரியா? அவர் சொல்வது சரியா? எது நடக்கப்போகிறது? என்பது ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவை அறிவிக்கப்படும் போது பகிரங்கப்படுத்தப்பட்டுவிடும்.

மேலும் செய்திகள்