< Back
தலையங்கம்
உயர்கல்வியில் முத்திரை பதித்த தமிழ்நாடு!
தலையங்கம்

உயர்கல்வியில் முத்திரை பதித்த தமிழ்நாடு!

தினத்தந்தி
|
20 Jun 2024 7:13 AM IST

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.

'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று அன்று மகாகவி பாரதியாரின் பாடலுக்கேற்ப, தமிழ்நாடு எப்போதும் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக, உயர் கல்வியில் இந்தியாவில் முதலிடம் பிடித்து முத்திரை பதித்துள்ளது. கல்வி வளர்ச்சியில், தமிழ்நாட்டில் இதுவரை இருந்த முதல்-அமைச்சர்கள் அனைவருமே அதிக முனைப்பு காட்டினார்கள். அந்த வரிசையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆட்சி பொறுப்பேற்றது முதல் கல்விக்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் எல்லாம், "கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருடமுடியாத சொத்து'' என்று அடிக்கடி சொல்லி வரும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், அதற்கேற்றாற்போல், பள்ளிக்கூட கல்வியிலும், உயர்கல்வியிலும் நிதிநெருக்கடி எத்தனை இருந்தாலும் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் நிறைவேற்றி வருகிறார்.

அதிலும் உயர்கல்வியில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் காலம், பொற்காலம் என்று சொல்லலாம். ஏனெனில் பள்ளிக்கூட படிப்பை முடித்து மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வியில் சேரவேண்டும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற சீரிய நோக்கில் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றி உயர்கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இது அகில இந்திய சராசரியைவிட 2 மடங்கு அதிகமாகும்.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து இடைநிற்றல் இன்றி உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் 'புதுமைப்பெண்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்க வகை செய்கிறது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் கலை கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புகளில் சேர்ந்து மாதம் ரூ1,000 பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக் கூடங்களில் படித்து உயர்படிப்பில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கும் மாதம் ரூ1,000 வழங்கும் 'தமிழ் புதல்வன்' திட்டமும் வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

அடுத்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சீரிய திட்டமாக 'நான் முதல்வன்' திட்டத்தை மாணவர்களுக்காக 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம்தேதி அவருடைய பிறந்த நாளன்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை கல்வியில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், தொழிலில், தனித்திறமையில் மட்டுமல்லாமல், நிறுவனங்களை நடத்தும் தொழில் முனைவோராக மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதாகும். இந்த திட்டத்தினால் இதுவரை 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதுபோல, மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் உயர்கல்வியில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது மிகவும் பெருமை அளிப்பதாக இருக்கிறது. உயர்கல்வித் துறை மேலும் உயரம் தொடட்டும்.

மேலும் செய்திகள்