விண்வெளி ஆய்வில் தமிழ்நாட்டின் பங்கு
|இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் நிலையில் விண்வெளி ஆய்விலும் வியத்தகு வெற்றிகளை அடைந்து வருகிறது.
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திரமோடி தன் சுற்றுப்பயணத்தை சூறாவளி சுற்றுப்பயணமாக்கியதோடு, நாட்டுக்கு பயனளிக்கும் நல்ல பல திட்டங்களை தொடங்கி வைத்த சாதனை பயணமாகவும் அமைத்திருந்தார். இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் நிலையில் விண்வெளி ஆய்விலும் வியத்தகு வெற்றிகளை அடைந்து வருகிறது.
முதலாவதாக கேரளாவுக்கு சென்ற அவர், அங்கு 'விக்ரம் சாராபாய்' விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, ஒரு முக்கியமான அறிமுகத்தை செய்து வைத்தார். விண்வெளி ஆய்வில் இந்தியாவில் இருந்து ராகேஷ் சர்மா 40 ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளிக்கு சென்று திரும்பினார். ஆனால் அவரை அழைத்து சென்றது ரஷியாதான். ரஷியா விண்கலத்தில்தான் அவர் விண்வெளி சென்றார். அதன் பிறகு இந்தியா, தானே வடிவமைத்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை அனுப்பவேண்டும் என்ற முனைப்பில் திட்டங்களை தீட்டியது.
இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் "ககன்யான்'' என்ற திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை இஸ்ரோ தொடங்கியது. 2025-ல் இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்னோட்டமாக 2 ஆளில்லா ராக்கெட்டுகளை அனுப்ப திட்டமிட்டு, இதில் ஒரு ராக்கெட் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இப்போது அடுத்த ராக்கெட்டில் 'வியோம்மித்ரா' என்ற பெண் ரோபோவை வைத்து இந்த ஆண்டு விண்ணில் செலுத்த பணிகள் தொடங்கியுள்ளன.
திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த பெண் ரோபோவின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு அதற்கு உத்தரவுகளை வழங்கினார். ககன்யான் திட்டத்தின் மூலம் யார் விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்? என்பது பரம ரகசியமாக இருந்தது. 4 பேர்களை தேர்ந்தெடுத்து ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது யார் அந்த 4 விண்வெளி வீரர்கள்? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி திருவனந்தபுரத்தில் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களுக்கு ககன்யான் திட்டத்தின் "லோகோ பேட்ஜை'' அணிவித்தார்.
குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், விங் கமாண்டர் சுபான்ஷூ சுக்லா ஆகிய இந்திய விமானப்படை போர் பிரிவில் பணியாற்றுபவர்களின் பெயர்களை பிரதமர் அறிவித்தார். இரு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த நேரத்தில், இந்த இரு மாநிலங்களையும் சேர்ந்த அஜித் கிருஷ்ணன், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தது, தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பெருமை.
இந்த 4 பேரில், 3 பேர் ககன்யான் விண்வெளி பயணத்தை மேற்கொள்வார்கள். சென்னையில் பிறந்த அஜித் கிருஷ்ணன் விமானப்படையில் 2,900 மணி நேரம் வானில் பறந்த அனுபவம் மிக்கவர். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் தமிழர்களுக்கும் தனிப்பெருமை. இதுபோல தூத்துக்குடி வந்த நேரத்தில் இஸ்ரோ சார்பில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்ததும், அவர் அடிக்கல் நாட்டிய சில மணிநேரத்தில் காற்றின் திசைவேகத்தை அளவிடும் 'ஆர்எச்200' என்ற சிறியரக ராக்கெட் குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டதும் நாட்டுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.