< Back
தலையங்கம்
Tamil Nadu tops in organ donation!
தலையங்கம்

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்!

தினத்தந்தி
|
10 Jun 2024 6:27 AM IST

உடல் உறுப்பு தானத்தில் தேசிய சராசரியைவிட 7 மடங்கு அதிகமாக பதிவாகி தமிழ்நாடு மனிதாபிமானமிக்க கருணை மாநிலம் என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.

சென்னை,

'தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்' என்பார்கள். அதாவது, அடுத்தவர் வயிற்று பசியாற்றுவதுதான் அந்த காலங்களில் சிறந்த தானமாக கருதப்பட்டது. ஆனால், இப்போது அடுத்தவர் உயிரைக்காப்பாற்றும் ரத்த தானம், உடல் உறுப்பு தானம் ஆகியவையே எல்லா தானங்களிலும் சிறந்த தானமாக விளங்குகிறது. ஒருவருடைய உறுப்பு, குறிப்பாக இதயம் பழுதுபட்டு செயலிழந்த நிலையில், மரணத்தின் பக்கம் நெருங்கும்போது, அவருக்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் உயிர் கொடுக்கப்படுகிறது.

இந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடியாக தமிழ்நாட்டில் கண் தானம் தொடங்கியது. கண் தானத்தின் மூலம் இறந்தவர்களின் கண்கள் மீண்டும் இந்த உலகை பார்த்துக்கொண்டிருக்க முடியும். அதுபோல, பார்வையிழந்தவர்களுக்கும் பார்வை கொடுத்து புதுவாழ்வு கொடுக்க முடியும்.

கண் தானத்தை தொடர்ந்து மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம், கை, கால், நுரையீரல், கணையம், சிறுநீரகம், தோல், எலும்பு, சிறுகுடல் ஆகியவற்றை தானமாக பெற்று, அந்த உறுப்புகள் செயலிழப்பால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு பொருத்தி, அவர்களுக்கு புதிய உயிர் வழங்குவதுதான் உடல் உறுப்பு தானமாகும். இந்த உடல் உறுப்பு தானம் செய்வதற்கான ஒழுங்குமுறை சட்டம் 1994-ல் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை மேலும் வலுப்படுத்தவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு மூளைச்சாவு சான்றிதழ் கட்டாயம் என்று கலைஞர் கருணாநிதி 2008-ல் சட்டம் கொண்டுவந்தார். இந்த இரு சட்டங்களையும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடுதான் கொண்டுவந்தது.

இந்த சட்டங்கள் கொண்டு வந்தபிறகு, தமிழ்நாட்டில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு அதிகரித்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்புகளைப் பெற்று அதை தேவைப்படுபவருக்கு பொருத்த, மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டுசெல்ல, போக்குவரத்தை நிறுத்தி எல்லா சிக்னல்களிலும் பச்சை விளக்கு எரிய செய்யும் வகையிலான நடைமுறையையும் தமிழ்நாடுதான் முதலில் கொண்டுவந்தது.

உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தவும் தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை செய்யவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி ஒரு உத்தரவைப்பிறப்பித்தார். அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படும். அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளில் யாராவது ஒருவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று உத்தரவிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு உடல் உறுப்பு தானத்தில் நல்ல விழிப்புணர்வும் ஊக்கமும் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு 55 பேர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் இருந்து, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து இதுவரை 575 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, அவர்களின் உறுப்புகள் 2,189 பேருக்கு பொருத்தப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் இருக்கிறது என்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் பெருமிதத்துடன் கூறினார்கள். உடல் உறுப்பு தானத்தில் தேசிய சராசரியைவிட 7 மடங்கு அதிகமாக பதிவாகி தமிழ்நாடு மனிதாபிமானமிக்க கருணை மாநிலம் என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.

மேலும் செய்திகள்