ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம்!
|தமிழ்நாடு ஏற்றுமதி குறியீட்டில் முதல் இடம் பிடித்துள்ளது. ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் தமிழ்நாட்டுக்கு வர இந்த குறியீடு வாசலை திறந்து வைக்கும்.
தமிழக அரசின் மணி மகுடத்தில், மேலும் ஒரு ஒளிவிடும் வைரமாக, இப்போது ஏற்றுமதி குறியீட்டில் முதல் இடம் பிடித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடனேயே, "தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர், அதாவது ரூ.75 லட்சம் கோடி பொருளாதார மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்" என்று சூளுரைத்து, அதை அடையும் வகையில் வேகமாக நடை போட்டு வருகிறார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்பது சும்மா கிடைத்துவிடாது. அதை அடைய வேண்டுமானால், தொழில் வளர்ச்சியில் இன்னும் அதிகமான வேகம் வேண்டும், ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட வேண்டும், விவசாய வளர்ச்சி வேண்டும். மொத்தத்தில் அனைத்து வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் வளர்ச்சி வேண்டும். அந்த வகையில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும், ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தொடங்க தொழில் முனைவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் விஷ்ணு ஆகியோர் எடுக்கும் முயற்சிகளும், பல புதிய தொழில்களை தொடங்க வழி வகுத்துள்ளன. ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள், தங்கள் உற்பத்தியை விரிவாக்கம் செய்துள்ளன. இவ்வாறு பல காரணங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவில் உயர்ந்து கொண்டே போகிறது. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இதுதவிர, மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.
சென்னையில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், என்ஜினீயரிங் சார்ந்த பொருட்கள், மருந்து மற்றும் ரசாயன பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியாகின்றன. பனியன் தொழில் ஏற்றுமதி திருப்பூரில் இருந்து நடக்கிறது. இந்த நிலையில், திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு, ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டு அட்டவணை அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த குறியீடு என்னவென்றால், ஏற்றுமதி செய்வதற்கு உகந்த சூழ்நிலை இருக்கும் மாநிலங்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் தரவரிசை வழங்குவதாகும். இதில் தமிழ்நாடு முதல் இடத்திலும், மராட்டியம் இரண்டாம் இடத்திலும், கர்நாடகம் மூன்றாம் இடத்திலும், குஜராத் நான்காம் இடத்திலும் இருக்கிறது. மாநில அரசின் கொள்கை, வர்த்தக சூழலியல், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகியவை இந்த குறியீட்டை வகுக்க முக்கிய அம்சங்களாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் இருப்பது ஏற்றுமதிக்கு துணையாக இருக்கிறது. இவ்வாறு பல சாதகமான அம்சங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால், முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஏற்றுமதி குறியீட்டில் முதல் இடத்தில் இருப்பது நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பெருமை. இது மேலும் தொழில் வளர்ச்சி அடைய உறுதுணையாக இருக்கும். ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் தமிழ்நாட்டுக்கு வர இந்த குறியீடு வாசலை திறந்து வைக்கும். 2030-க்கு முன்பே ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாறிவிட முடியும்.