< Back
தலையங்கம்
இந்த மாணவர்களுக்கும் கொடுக்கலாமே !
தலையங்கம்

இந்த மாணவர்களுக்கும் கொடுக்கலாமே !

தினத்தந்தி
|
19 Jan 2024 5:15 AM IST

அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்க்கவும், கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பெருமைப்பட பாடினார், மகாகவி பாரதியார் அன்று. அந்தவகையில், பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, கல்வியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். அதற்கு பிறகு, அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று அனைத்து முதல்-அமைச்சர்களும் கல்வி வளர்ச்சியில் பெரும் தொண்டாற்றினார்கள்.

இப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி வளர்ச்சிக்காக பல புதுமையான திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இப்போது 37 ஆயிரத்து 606 அரசு பள்ளிக்கூடங்களும், 7 ஆயிரத்து 273 அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களும், 1,065 பகுதியாக நிதியுதவிபெறும் பள்ளிக்கூடங்களும், 12 ஆயிரத்து 809 தனியார் பள்ளிக்கூடங்களும் இயங்கிவருகின்றன. இதில், அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மட்டும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 'நீட்' தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக காத்திருக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தார். அதேபோல், என்ஜினீயரிங் உள்பட அனைத்து தொழிற்கல்லூரிகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினார். மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார்.

இதுமட்டுமல்லாமல், 6-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு, பட்டப்படிப்புக்காக கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனால், கல்லூரிகளில் படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது. இதெல்லாம் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, பாராட்டக்கூடிய திட்டங்களாகும். ஆனால், இந்த திட்டங்களின் பயன்களெல்லாம் அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது, அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்க்கவும், கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோல, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மற்ற மாணவர்களும், அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களைப்போல ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்தான்.

காமராஜர் ஆட்சி காலத்தில்தான் அரசு பள்ளிக்கூடங்கள் இல்லாத இடங்களில், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் தொடங்க ஊக்குவிக்கப்பட்டது. அந்த பள்ளிக்கூடங்களிலும் மதியஉணவு போடப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டம்கூட அரசு பள்ளிக்கூடங்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை கலைத்திருவிழா போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டபோது, அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் இரண்டிலுமே நடத்தவேண்டும் என்றுதான் முடிவெடுத்து நடத்துகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகளில், பக்கத்து ஊருக்கு சென்று அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் அக்காவுக்கு கிடைக்கும் சலுகைகள், உள்ளூரிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் தங்கைக்கு கிடைக்கவில்லை. இவ்விரு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகள் இருவருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதை கருத்தில்கொண்டு, அனைத்து சலுகைகளையும் இரு பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்