ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத ஊக்கமளிக்கும் 'நான் முதல்வன்' திட்டம்!
|முதல்நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முதன்மை தேர்வுக்கு தயாராக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்வி திட்டங்களுக்கு அரசு காட்டும் அக்கறையால், இப்போது பள்ளிக்கூடத்துக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்றநிலை உருவாகியுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கல்வியின்பால் அதிக நாட்டம் ஏற்பட்டிருப்பது, மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஆனால், படித்து முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதன் மூலம்தான், அவர்களின் வாழ்க்கையை ஒளிமிக்கதாக மாற்ற முடியும். அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காலாகாலமாக இளைஞர் சமுதாயத்திடம் மட்டுமல்லாமல், அவர்கள் பெற்றோரிடமும் "அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம்" என்ற ஒரு தணியாத ஆசை இருக்கிறது. ஏனெனில், அரசாங்க பணிகளில் நல்ல சம்பளம் மட்டுமல்லாமல், பல சலுகைகளும் இருக்கின்றன. அரசு பணிகளில் உச்சபட்ச பணி, இந்திய ஆட்சி பணி என்று கூறப்படும் ஐ.ஏ.எஸ் பணிதான். மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசிலும் நிர்வாகத்தில் உயரிய பணி அதுதான். அதனால்தான், இளைஞர்களுக்கு இது ஒரு கனவு பணியாக இருக்கிறது.
ஆண்டுதோறும் மத்திய தேர்வாணைய குழு, சிவில் சர்வீசஸ் என்ற குடிமைப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். உள்பட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்ற நிலைமாறி, இப்போது மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி விகிதம் இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி மனிதநேயம் என்ற பயிற்சி மையத்தை நடத்தி, இந்த தேர்வுக்காக இலவச பயிற்சி வழங்கி வருகிறார். பலர் தேர்வு பெற்றுள்ளனர். நிறைய பேர் தேர்வாகவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படும் ஆயிரம் மாணவர்களுக்கு, 10 மாதங்களுக்கு ரூ.7,500 மாதாந்திர ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் இப்போது தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டு கழகத்தால் செயல்படுத்தப்படுகிறது. மதிப்பீடு தேர்வில் கலந்துகொள்ள எதிர்பார்த்ததற்கு மேலாக 50 ஆயிரத்துக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று, திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா கூறினார். இந்த மாணவர்களுக்கு 10-9-2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மதிப்பீட்டு தேர்வு நடக்கிறது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றி ஆயிரம் மாணவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அகில இந்திய குடிமை பணி பயிற்சி தேர்வு மையத்திலும், மதுரை, கோயம்புத்தூரில் இயங்கிவரும் அண்ணா குடிமைப்பணி பயிற்சி நிலையங்களிலும் சேர்க்கப்படுவார்கள். அரசு எடுக்கும் இந்த முயற்சிகளால் மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெறும் ஆயிரம் மாணவர்களில் இருந்து, நிறைய பேர் இந்த ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்ற வகையில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முனைப்பு பாராட்டுக்குரியது. இதுமட்டுமல்லாமல், முதல்நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முதன்மை தேர்வுக்கு தயாராக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணி அதிகாரிகளை ஏழை, நடுத்தர குடும்பங்களில் இருந்து கொண்டுவர இந்த ஊக்கத்தொகை நிச்சயம் உதவும்.