வாடிகன் நகரில் தமிழ் மணம்!
|‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைக் கேட்கும்போதெல்லாம் தமிழர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும். 1891-ம் ஆண்டு மனோன்மணியம் நூலில் இந்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதினார்.
இந்த பாடலை அனைத்து விழாக்களிலும் பாடவேண்டும் என்று 1913-ம் ஆண்டு கரந்தை தமிழ்சங்கத்தின் ஆண்டறிக்கையில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது. 1969-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சியின்போது பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் விழாக்களின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்று முடிவெடுத்து அறிவிக்க இருந்த நிலையில் காலமானார். கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் 1970-ல் இந்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்து பெருமை சேர்த்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி தமிழக அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும், தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாடவேண்டும், பாடலைப் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவு கடல் கடந்து இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1712-ம் ஆண்டு பிறந்த தேவசகாயம் பிள்ளை இறைபணியோடு சாதி கொடுமைகளையும் ஒழிக்க பாடுபட்டதால், 14-1-1752-ல் ஆரல்வாய்மொழி அருகில் உள்ள காற்றாடி மலையில் திருவிதாங்கூர் மன்னரின் படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு, அவரது உடல் வனவிலங்குகளுக்கு இரையாக போடப்பட்டது. அவரது உடலின் எஞ்சிய பகுதிகள் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தின் பலிபீடத்துக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டது. வாடிகன் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் ஆண்டவரால் அருளாளர் பட்டம் பெற்ற தேவசகாயம் பிள்ளைக்கு, இப்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக நடந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
இந்த விழா முழுவதும் தமிழ் மணம் கமழ்ந்தது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆரம்பம் முதல் இறுதி வரை போப் ஆண்டவர் முன்னிலையில் தமிழிலேயே நடந்தது. 6 நாடுகளில் பணிபுரியும் 6 கன்னியாஸ்திரிகள் மிக இனிமையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட, அனைவரும் எழுந்து நின்றனர். தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகளெல்லாம் தமிழிலேயே நடந்தது. மொரிஷியஸ் நாட்டில் உள்ள பெண்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி, பாரீஸ் தமிழ் பெண்களின் கும்மி நடனம், சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களின் பாட்டு என்று பல நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடந்தன. பீட்டர் அல்போன்ஸ் தமிழில் பேசினார். 'இத்தாலி நாட்டை சேர்ந்த வீரமாமுனிவர் தமிழில் தேம்பாவணி பாடலை எழுதினார். இப்போது வாடிகன் நகரில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் குழந்தை அடிகளார் தேவசகாயம் வாழ்க்கை வரலாற்றை இத்தாலி மொழியில் எழுதியிருக்கிறார்' என்று குறிப்பிட்டார். 'வாடிகன் நகரில் போப் ஆண்டவர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள பேராயர்கள், ஆயர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்' என்று பெருமையோடு கூறினார். அதை மெய்ப்பிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்த பேராயரும், செய்தி அளித்த பேராயரும், நன்றியுரை ஆற்றியவர் என்று எல்லோருமே அழகிய தமிழிலேயே பேசினர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், 'எத்திசையும் புகழ் மணக்க' என்று ஒரு வரி வரும். அதற்கேற்ற வகையில் வாடிகன் நகரில் தமிழ் புகழ் மணம் வீசியது.