அனைவருக்கும் தமிழ்; இது ஒரு நல்ல தொடக்கம்!
|ரெயில்வேயில் பணியாற்றும் வெளிமாநில பணியாளர்கள் தமிழ் படிப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே இப்போது செய்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் மத்திய அரசாங்க துறைகளில், அதிலும் மக்களோடு தொடர்புள்ள ரெயில்வே, தபால் துறை, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை போன்றவற்றில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவரே நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். ரெயில்வேயை எடுத்துக்கொண்டால், கேட் கீப்பர் முதல் புக்கிங் கிளார்க், டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, ரெயில்வே பாதுகாப்புப் படை உள்பட அனைத்து பதவிகளிலுமே வெளிமாநிலத்தவர், குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்களே பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கும் தமிழ் தெரியாது, அவர்களை நாடிவரும் சாதாரண பாமர மக்களுக்கும் இந்தி தெரியாது. அதனால், ஒருவர் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கேட்கும் சேவையையும் பெற முடியவில்லை.
இந்த மொழி பிரச்சினை பாமர மக்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு, கனிமொழி எம்.பி. ஒருமுறை சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரிடமே அங்கிருந்த பாதுகாப்பு போலீஸ்காரர் இந்தியில் பேச, கனிமொழி, "எனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்று சொல்ல, ஒரு பெரிய சர்ச்சையே வெடித்தது. இந்த சம்பவத்தின்போதே, தமிழக மக்களிடம் இருந்து, "தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளிமாநிலத்தவருக்கு தமிழில் பேச, அதை புரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கவேண்டும்" என்று குரல் எழும்பியது. ஆனால், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர், குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் போன்ற பலர் தமிழரைப்போல தமிழில் சரளமாக பேசுவது பெரும் வியப்பை அளிக்கிறது.
இதற்கு காரணம், தமிழ்நாட்டில் பணிக்கு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் கற்றுக்கொடுப்பதும், அவர்களுடைய தகுதிகாண் பருவத்தில், அதாவது 'புரபேஷனரி பீரியடில்' இரு தமிழ் தேர்வுகளில் வெற்றி பெற்றால்தான் பணிக்கு சேர்ந்தவுடன் உதவி-கலெக்டர் என்ற பதவியில் இருப்பவர்களுக்கு சப்-கலெக்டர் என்ற அந்தஸ்து கிடைக்கும் என்ற நிபந்தனையும் இருப்பதால்தான். இதே நடைமுறை, அனைத்து மத்திய அரசாங்க பணிகளிலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது. இப்போது, ரெயில்வே துறை அதற்கு செவி சாய்த்து விட்டது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.
ரெயில்வேயில் பணியாற்றும் வெளிமாநில பணியாளர்கள் தமிழ் படிப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே இப்போது செய்து இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் பணியாற்றும் 82 ஆயிரம் பணியாளர்களில் 25 ஆயிரம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். சென்னை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள கோட்ட அலுவலகங்களில் அவர்களுக்கு தேவையான அளவில் தமிழில் பேசும் திறனும், தமிழில் பேசுவதை புரிந்துகொள்ளும் திறனும் கற்றுக்கொடுக்க தனியார் கல்வி நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல முடிவாகும். இதே நடைமுறையை வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை, விமான நிலைய பணியாளர்கள் உள்பட மக்களோடு நேரடி தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் அனைத்து வெளிமாநில அலுவலர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்தால் ஒரு சகோதரத்துவம் உருவாகும், அரசின் சேவைகளும் முழுமையாக கிடைக்கும்.