< Back
தலையங்கம்
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் தமிழ் சாம்பியன்ஸ்!
தலையங்கம்

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் தமிழ் சாம்பியன்ஸ்!

தினத்தந்தி
|
15 Nov 2023 1:15 AM IST

தமிழ்நாடு எப்போதுமே விளையாட்டுகளில் தனி முத்திரை பதித்து வருகிறது. பண்டைய காலங்களில் இருந்தே பல்வேறு வகையான விளையாட்டுகளில் இளைஞர்கள் ஆர்வத்தோடு இருந்திருப்பதை நமது இலக்கியங்களில் காணலாம்.

தமிழ்நாடு எப்போதுமே விளையாட்டுகளில் தனி முத்திரை பதித்து வருகிறது. பண்டைய காலங்களில் இருந்தே பல்வேறு வகையான விளையாட்டுகளில் இளைஞர்கள் ஆர்வத்தோடு இருந்திருப்பதை நமது இலக்கியங்களில் காணலாம். தமிழக அரசும் விளையாட்டுத்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது. உலகமே வியக்கும் வண்ணம் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை சிறப்பாக நடத்திய பெருமை தமிழக அரசுக்கு உண்டு. அதில் நல்லதொரு பங்களிப்பை நல்கிய உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை வழங்கினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், விளையாட்டு மேம்பாட்டுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய வீரர்கள் 107 பதக்கங்களை வென்றார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வீரர்கள் மட்டும் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என்று 28 பதக்கங்களை பெற்றனர். பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு, இந்தியாவில் 5-வது இடத்தில் இருக்கிறது. இதை முதல் இடத்துக்கு கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சி எடுத்து வருகிறார். திறமை இருந்தும் போதுமான பயிற்சியோ, உபகரணங்களோ, ஊட்டச்சத்து உணவோ, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள போதிய நிதி வசதியோ இல்லாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு கைகொடுத்து உதவ, தமிழக அரசு 'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' என்ற அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் அதி நவீன உள் கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து பெறக்கூடிய நன்கொடைகளை வைத்து செயல்படுகிறது, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை மூலம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தேவையான நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த மே மாதம் 8-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்கு, தமிழக அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனது சொந்த நிதியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் வழங்கினார்.

இதுவரை நன்கொடையாக ரூ.21 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 121 பெறப்பட்டு இருக்கிறது. 228 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடியே 63 லட்சத்து 92 ஆயிரத்து 737 வழங்கப்பட்டுள்ளது. திறமை இருந்தும் நிதி வசதி இல்லாமல் பல்வேறு பயிற்சிகளை பெற முடியாமலும், போட்டிகளில் பங்கேற்க செல்ல முடியாமலும் தவிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு தொடங்கியுள்ள, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நல்ல உதவிகளை செய்து வழிகாட்ட தயாராக காத்து நிற்கிறது.

எனவே, எங்கோ குக்கிராமத்தில் வசிக்கும் திறமைசாலிகள் கூட இந்த உதவியைப்பெற்று வெற்றிகளை குவிக்க முடியும். அவர்களை அடையாளம் கண்டு, இந்த அறக்கட்டளையின் உதவியை பெற்றுக் கொடுக்க தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், உள்ளாட்சி அமைப்புகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிச்சயமாக கொண்டு செல்லும்.

மேலும் செய்திகள்