சந்திரபாபு நாயுடுவை அரியணை ஏற வைக்கும் 'சூப்பர் சிக்ஸ்' வாக்குறுதிகள்
|சந்திரபாபு நாயுடு வருகிற 12-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.
சென்னை,
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு இமாலய சாதனையை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நிகழ்த்தியுள்ளார். அவருடைய கட்சியின் நிறுவனரும், மாமனாருமான என்.டி.ராமராவ் ஆந்திராவில் 3 முறை முதல்-மந்திரியாக இருந்து இருக்கிறார். இப்போது சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 12-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்று புதிய வரலாறு படைக்க இருக்கிறார்.
கடந்த 2019 தேர்தலின்போது 3 எம்.பி.க்களையும், 23 எம்.எல்.ஏ.க்களையும் மட்டுமே பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சி இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தனியாக 135 இடங்களிலும், கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 175 இடங்களில் 164 இடங்களை பெற்று இருக்கிறது. இதுவரையில் முதல்-மந்திரியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 18 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்பதால் அந்த தகுதியைக்கூட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை.
இதுபோல மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 16 இடங்களில் தெலுங்கு தேசமும், 4 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், 3 இடங்களில் பா.ஜனதாவும், 2 இடங்களில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் வெற்றி பெற்று இருக்கிறது. தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் பா.ஜனதாவுக்கு பெரிய அரசியல் லாபம். முதலாவதாக தென் மாநிலத்தில் அதாவது, ஆந்திராவில் தன் கால்களை பா.ஜனதாவால் ஊன்ற முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பா.ஜனதா வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் தெலுங்கு தேசம் பெற்று இருக்கும் 16 இடங்கள் மத்தியில் ஆட்சியமைக்க ஆபத்பாந்தவனாக இருக்கிறது. அந்த 16 இடங்கள் சந்திரபாபு நாயுடுவை கிங்மேக்கராக்கிவிட்டது.
இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த சந்திரபாபு நாயுடு தன் கனவுத் திட்டமாக உலகத் தரத்திலான பசுமைவெளி அமராவதியை ஆந்திராவின் தலைநகராக உருவாக்க வேண்டும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுடன், தங்கள் கட்சிக்கு மத்திய மந்திரிகள் பொறுப்பும் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை நிபந்தனைகளாக வைக்க இதுதான் சரியான நேரம் என்று வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் இந்த இமாலய வெற்றிக்கு தேர்தலின் போது அவர் உறுதி அளித்த 'சூப்பர் சிக்ஸ்' வாக்குறுதிகள்தான் காரணம். 19 வயது முதல் 59 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை, 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை, அதுவரை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் நிதி உதவி, பள்ளிக்கூடம் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் என்று அளித்த வாக்குறுதிகள்தான் வாக்குகளை அள்ளித்தந்துள்ளது. இந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு எப்படி நிதி திரட்டுவார்? என்பதுதான் கேள்விக்குறி.