தமிழக அரசு அமைத்த மாநில கல்வி குழு
|உலகம் வேகமாக மாறி வருகிறது. நவீன காலத்தில் அதற்கேற்றவாறு எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசின் கடமை. அதிலும் குறிப்பாக பள்ளிக்கூட கல்வி என்றாலும் சரி, கல்லூரி கல்வி உள்ளிட்ட உயர் கல்வி என்றாலும் சரி, கால மாற்றத்துக்கேற்ப மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் தேசிய கல்வி கொள்கையை அறிவித்து இருந்தது. இப்போதுள்ள பள்ளிக்கூடகல்வி முறையில் அதாவது 10+2 என்ற முறையை அப்படியே மாற்றி 5+3+3+4 என்ற முறை கூறப்பட்டு இருந்தது. மேலும் தேசிய கல்வி கொள்கை மும்மொழி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக அரசு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே லட்சியமாக கொண்டுள்ளது என்ற அடிப்படையிலும், மேலும் பல அம்சங்கள் தமிழக அரசுக்கு ஏற்புடையதாக இல்லை என்ற வகையிலும், தமிழ்நாட்டில் இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், "அறிவை விரிவு செய், அறிவியலில் புதுமை செய்" என்ற பாரதிதாசன் கருத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், கல்வியில் பல புதுமைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திவருகிறார்.
முதல்-அமைச்சரின் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோள்களுக்கேற்ப, மாநிலத்துக்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, கடந்த ஏப்ரல் 5-ந் தேதி தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, டெல்லி ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த குழுவில் மிகச்சிறந்த கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மற்றொரு சிறப்பு, கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிலைமை, அடிப்படை கல்வி நிலைமையை ஆராய, நாகை மாவட்டம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு இடம்பெற்று இருப்பது அனைத்து மட்டத்திலும் கல்வி வளர்ச்சியில் தமிழக அரசுக்கு உள்ள முனைப்பை பறைசாற்றுகிறது.
இது தொடர்பான அரசு ஆணை கடந்த மாதம் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. அதன் வரையறையில் கல்வி மற்றும் தமிழக இளைஞர்களின் எதிர்கால நலனையும் கருத்தில்கொண்டு, ஒரு சிறப்பான மாநில கல்வி கொள்கையை வகுக்க வேண்டும், நவீன தொழில்நுட்பம், குழந்தைகள் பராமரிப்பு, பள்ளிக்கூட கல்வி, கல்லூரி கல்வி, உயர்கல்வி, முதியோர் கல்வி உள்பட மாறிவரும் உலகளாவிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை லட்சியமாக கொண்டு கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை பெற்று, தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரை செய்ய வேண்டும், தேர்வு முறையில், சீர்திருத்தம், ஆசிரியர்கள் தேர்வு மற்றும் பயிற்சியில் சீர்திருத்தம், பள்ளிக்கூடங்களில் படித்து தேர்வில் வெற்றிபெறும் அனைத்து மாணவர்களும், ஏதாவது ஒரு உயர் கல்வியில் சேருதல் உள்பட பல பரிந்துரைகளை இந்த குழு அளிக்க வேண்டும். ஒரு ஆண்டில் இந்த குழு தனது இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கென தனி கல்வி கொள்கையை அமைப்பது நிச்சயம் வரவேற்புக்குரியது. சரித்திர காலத்தில் இருந்து தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும், படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான பாடத்திட்டங்களும் பரிந்துரை செய்யப்பட வேண்டும், ஏற்கனவே வைரமாக இருக்கும் தமிழக கல்வியும், நமது இளைஞர்களும் மேலும் பட்டை தீட்டப்பட்டு ஒளிவிடும் வைரமாக திகழ இந்த புதிய கல்வி கொள்கை உறுதியாக வழி வகுக்கும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.