நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் சிறப்பு என்ன?
|17-வது நாடாளுமன்ற மக்களவையின் 13-வது கூட்டமும், மாநிலங்களவையின் 261-வது கூட்டமுமான சிறப்பு கூட்டம், வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கும்.
17-வது நாடாளுமன்றத்தின் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் முடிவடைந்து, தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வழக்கமாக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என்ற பெயரில் 3 முறை கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தொடர்களில்தான் பல மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், "17-வது நாடாளுமன்ற மக்களவையின் 13-வது கூட்டமும், மாநிலங்களவையின் 261-வது கூட்டமுமான சிறப்பு கூட்டம், வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கும். இந்த கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும் இருக்கும் என அமிர்தகாலம் எதிர்பார்க்கிறது" என்று குறிப்பிட்டார். இது நாடு முழுவதும் பெரிய ஆச்சரியங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதானே மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது, அடுத்த குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் 1½ மாதங்களில், அதாவது நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறதே, இப்போது அப்படி என்ன அவசரமான அலுவல்? என்ற கேள்வி மக்கள் மனதில் பிறந்துள்ளது.
நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் சிறப்பு கூட்டம் நடந்துள்ளது. அதாவது, 2017-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி நள்ளிரவில் இரு அவைகளையும் ஒன்றாக கூட்டி, கூட்டு கூட்டமாக சரக்கு சேவை வரியை அமலுக்கு கொண்டுவருவதற்குத்தான் கூட்டப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை வெகுசில நேரங்களிலேயே சிறப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளது. இப்போது, பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளான 17-ந்தேதிக்கு அடுத்த நாள், அதுவும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்தொடரின் அலுவல்கள் குறித்த அறிவிப்பு, 10-ந்தேதி ஜி-20 மாநாடு முடிந்த பிறகே வெளிவரும் என்று தெரிகிறது.
கடந்த மே மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பொது சிவில் சட்டம், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அரசியல் வட்டாரங்களில் அதையும் தாண்டி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்கள் நடக்க இருக்கும் சூழ்நிலையில், அதோடு நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படலாம் என்ற கருத்தும், 'ஒரே நாடு-ஒரே தேர்தல்' என்ற தார்ப்பரியத்தின்படி, நாடாளுமன்ற தேர்தலோடு அனைத்து சட்டசபைகளுக்கும் தேர்தல் என்ற விதை விதைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் பேச்சுக்கள் உலா வருகிறது. அதை உறுதிப்படுத்துவது போல, ஒரே நாடு-ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
மும்பையில் நடக்கும் 'இந்தியா' எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன. முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால், அரசியல் ரீதியாகவும் நரேந்திரமோடிக்கு பல சாதகங்கள் இருக்கிறது என்ற கணக்கில், முன்கூட்டியே தேர்தல் வரப்போகிறது. அது நாடாளுமன்றத்துக்கு மட்டுமா?, அனைத்து சட்டசபைகளுக்கும் சேர்த்தா? என்பது சிறப்பு கூட்டத்தில்தான் தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.