< Back
தலையங்கம்
மாநிலங்களவைக்கு செல்லும் சோனியா காந்தி!
தலையங்கம்

மாநிலங்களவைக்கு செல்லும் சோனியா காந்தி!

தினத்தந்தி
|
4 March 2024 6:31 AM IST

சோனியா காந்தி மக்களவைக்கு போட்டியிடவில்லை என்பதை ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, வரும் தேர்தலில் அவரது குடும்ப தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை அவர் மக்களவைக்கு போட்டியிடவில்லை என்பதை ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு இந்தியில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துவிட்டார். அதே சமயத்தில், அவர் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப்போகிறார் என்பதை உலகுக்கு காட்டும் வகையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சோனியாகாந்தி ரேபரேலி தொகுதி மக்களுக்கு பல செய்திகளை கூறியுள்ளார். அவருக்கு இப்போது 77 வயதாகிறது. அந்த கடிதத்தில் அவர், "நான் இப்போது இருக்கும் நிலைமைக்கு நீங்கள்தான் காரணம் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நான் என்னால் இயன்ற அளவுக்கு செய்து இருக்கிறேன். இப்போது என்னுடைய உடல் நலம் மற்றும் வயது பிரச்சினை காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு நான் உங்களுக்கு நேரடியாக பணியாற்றும் வாய்ப்பு இருக்காது. ஆனால், என்னுடைய இதயமும் ஆன்மாவும் உங்களுடனேயே இருக்கும். கடந்த காலங்களில் இருந்தது போல நீங்கள் எதிர்காலத்திலும் என்னுடனும் என் குடும்பத்தோடும் நிற்பீர்கள் என்பதை நான் அறிவேன். ரேபரேலியில் என் குடும்பத்தின் வேர்கள் மிக ஆழமாக இருக்கின்றன. சுதந்திரத்துக்கு பிறகு என் மாமனார் பெரோஸ் காந்தியை மக்களவைக்கு அனுப்பினீர்கள். என் மாமியார் இந்திராகாந்திக்கும் ஆதரவாக இருந்தீர்கள். எனது கணவர் மறைவுக்கு பிறகு நான் உங்களிடம் வந்தேன். நீங்கள் என் பக்கத்தில் ஒரு பாறையை போல நின்று உங்கள் அனைவருடைய அன்பையும் காட்டினீர்கள்" என்று எழுதியுள்ளார்.

அரசியல் நிபுணர்கள் இந்த கடிதத்தைப் பார்க்கும்போது, பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் நிற்க வாய்ப்பு இருப்பதை சூசகமாக சோனியாகாந்தி தெரிவித்து இருக்கிறார் என்று கருதுகிறார்கள். நேரு குடும்பத்தில் ஒருவர் இரண்டாவதாக மாநிலங்களவைக்கு செல்கிறார். முதல் முறையாக இந்திரா காந்தி 1964 முதல் 1967 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்கு பிறகு பிரதமர் பொறுப்பேற்க அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். இப்போது சோனியாகாந்தி மாநிலங்களவைக்கு செல்கிறார். நேரு குடும்பத்தில் இதுவரை 8 பேர், அதாவது ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இருந்து இருக்கிறார்கள். இதில் மேனகா காந்திதான் அதிகமாக 8 முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார்.

சோனியாகாந்தி 7 முறை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். அதில் ஒரு முறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். அதுபோல, 1999 தேர்தலில் கர்நாடகா மாநிலம் பெல்லாரியிலும் உத்தரபிரதேச மாநிலம் அமேதியிலும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். ஆக, அவர் 5 மக்களவையில் பணியாற்றியிருக்கிறார். இப்போது மக்களவைக்கு விடை கொடுத்தாலும் தன் மகனையும் மகளையும் மக்களவையில் பணியாற்ற செய்வார். ஒரே நேரத்தில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பெறுவார்கள் என்பது காங்கிரசாரின் கணிப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்