தேர்தல் ஆணையத்தின் மவுனம் கலையுமா?
|ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன.
சென்னை,
18-வது மக்களவை தேர்தல் தற்போது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 2 கட்ட தேர்தல் 25-ந்தேதியும், ஜூன் 1-ந்தேதியும் நடைபெற இருக்கிறது. மொத்தமாக ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளும் கட்சி எது? என்பது முடிவு செய்யப்பட்டு விடும். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கட்சிக்கும் மக்களின் ஆதரவு எவ்வளவு? என்பதும் தெரிந்துவிடும்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16-ந்தேதியில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், இது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ந்தேதிக்கு பிறகும் 6-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த இடைப்பட்ட கால கட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து போய்விட்டது. அரசால் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் அறிவிக்கவும் முடியாது, செயல்படுத்தவும் முடியாது என்று விதிகள் இருக்கின்றன. அரசு சார்பாக எந்த விழாவும் நடத்த முடியாது. அவ்வளவு ஏன், மறைந்த பெரும் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினத்தன்று கூட அவர்களின் சிலைகளுக்கு அரசு சார்பில், முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ மரியாதை செலுத்த முடியாது.
இதுமட்டுமல்லாமல், விபத்துகள் போன்ற அசாதாரண சம்பவங்களால் உயிரிழப்பவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் கருணை தொகையைக்கூட வழங்க முடியாது என்பதுதான் ஏற்புடையது அல்ல. ஏற்காடு மலையில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நடந்த பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மே 1-ந்தேதி விருதுநகர் வெடிபொருள் கிட்டங்கியில் நடந்த வெடி விபத்தில் 3 பேரும், மே 9-ந்தேதி சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 8 பேரும், பல்வேறு சாலை விபத்துகளில் மொத்தம் 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ செலவுக்காக உதவி தொகையும் வழங்கப்படுவதற்கான அறிவிப்பு முதல்-அமைச்சரால் உடனடியாக வெளியிடப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த துயரச் சம்பவங்கள் நடந்தபோது உடனடியாக இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரண தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அரசும், நிவாரண உதவி வழங்குவதற்காக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த கருணைத் தொகை வழங்கக்கூட அனுமதி தராமல் மவுனம் காத்து வருகிறது. பொதுவாக, இதுபோன்ற அரசு உதவிகள், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, அந்த துயரமான நேரத்தில் வழங்கினால்தான் பேருதவியாக இருக்கும். எனவே, தேர்தல் ஆணையம் தன் மவுனத்தை கலைத்து இதுபோன்ற நிவாரண உதவிகள் வழங்க அனுமதி கொடுக்கவேண்டும். ஏப்ரல் 19-ந்தேதியே தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகு இன்னும் தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரில் பிறப்பிக்கப்பட்டுள்ள இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதற்கு? என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.