நாடாளுமன்றத்தில் செங்கோல்; தமிழர்களுக்கு பெருமை
|ஜனநாயகத்தின் இதயமாக கருதப்படுவது நாடாளுமன்றம்தான். இப்போது டெல்லியில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 1927-ல் கட்டி முடிக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் இதயமாக கருதப்படுவது நாடாளுமன்றம்தான். இப்போது டெல்லியில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 1927-ல் கட்டி முடிக்கப்பட்டது. மிகவும் பழமையான கட்டிடம் இது. இப்போதிருக்கும் வசதிகள் போதுமானதாக இல்லை, கூடுதல் வசதிகள் தேவைப்படும் நேரத்திலும், இன்னும் கூடுதலாக உறுப்பினர்கள் அமரவேண்டிய நேரத்திலும் இப்போதுள்ள கட்டிடம் போதாது, இன்னும் பெரிய கட்டிடம் நாடாளுமன்றத்துக்கு வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்தது.
எனவே புதிய கட்டிடம் கட்டுவதற்கான தீர்மானங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மிக வேகமாக கட்டுமான பணிகள் நடந்தன. ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி (நாளை) 28-ந் தேதி திறந்து வைக்கிறார். இந்த கட்டிடம் சுயசார்பு இந்தியாவை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
'இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காமல் அவரை புறக்கணித்திருப்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரிய அடியாகும். ஜனாதிபதிக்கு இழைக்கப்பட்ட பெரிய அவமதிப்பாகும். நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் ஆன்மா பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம்', என்று காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்பட 19 கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 2 கட்சிகளும் இந்த திறப்புவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்பட 25 கட்சிகள் இதில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன. இது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தமிழர்களுக்கு பெருமையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில் சோழர் கால மாதிரி செங்கோலை இந்த புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவப்போகிறார். இந்த செங்கோலுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதை எப்படி அடையாளப்படுத்துவது? என்று கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன், ஜவஹர்லால் நேருவிடம் கேட்க அவர் மூதறிஞர் ராஜாஜியிடம், 'நீங்கள்தான் இதற்கு தீர்வுகாண வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
ராஜாஜியின் ஆலோசனையின்படி திருவாடுதுறை ஆதீன மடாதிபதி சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் நீதியின் அடையாளமாக திகழும் நந்தி சிலையை மேற்புறத்தில் கொண்ட 5 அடி உயரம் கொண்ட செங்கோலை தயாரிக்க செய்து, அதை 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி இரவு 11.45 மணிக்கு இறைபாடல்கள் பாடி மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து, அவரிடம் இருந்து வாங்கி ஆட்சி பொறுப்பை ஏற்க இருந்த நேருவிடம் இளைய தம்பிரான் வழங்கினார். இந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இது சோழ மன்னர்கள் காலத்து மாதிரி செங்கோல். இப்போது மட்டுமல்ல இனி எந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களும் நீதி வழுவா நெறிமுறையின்படி ஆட்சி செய்த சோழ மன்னர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், தமிழகத்தின் பெருமையை புரிந்துகொள்ளவும் இந்த செங்கோல் வழிவகுக்கும்.