அரசு ஊழியரின் உயிரை காவு வாங்கிய மணல் கொள்ளை!
|தமிழ்நாட்டில் 34 ஆறுகள் இருக்கின்றன. அதிலும் தாமிரபரணி ஆற்றுக்கென தனிச்சிறப்பு உண்டு.
தமிழ்நாட்டில் 34 ஆறுகள் இருக்கின்றன. அதிலும் தாமிரபரணி ஆற்றுக்கென தனிச்சிறப்பு உண்டு. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி நெல்லை மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத நதி தாமிரபரணி என்ற பெருமை இதற்கு உண்டு. அத்தகைய தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல்கொள்ளையை தடுத்த கடமை தவறாத, நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது, தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களையும் துயரத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். 55 வயதான இவர், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். தாமிரபரணி ஆற்றில் இருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதை தடுத்த அவர், இதுகுறித்து போலீசிலும் உடனடியாக புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், அலுவலகத்தில் உட்கார்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். போலீசார் அந்த இருவரையும் கைது செய்துவிட்டார்கள். ஏற்கனவே அதில் ஒருவர் மீது மணல் கடத்தல் உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆதிச்சநல்லூரில் லூர்து பிரான்சிஸ் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தபோது தொல்லியல் அருங்காட்சியகம் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்திய இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுத்ததன் எதிரொலியாக, அங்கும் இதுபோல தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்த துயர சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன்பு மணல் கடத்தலை தடுத்த சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை வீச்சரிவாளால் வெட்ட முயன்ற மற்றொரு பயங்கர சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த சம்பவங்கள் அரசு ஊழியர்கள் குறிப்பாக, கிராம நிர்வாக அதிகாரிகளிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. அரசு எந்திரத்தில் கீழ்மட்டத்தில் ஒரு முக்கியமான பங்கை வகிப்பவர், கிராம நிர்வாக அதிகாரிதான். வேலைபார்க்கும் பகுதியில் என்ன சம்பவம் நடந்தாலும், உடனடியாக போலீசுக்கு புகார் கொடுக்கும் பொறுப்பு அவருக்குத்தான் உண்டு.
கள்ளச்சாராயம் காய்ச்சினாலும், மணல்கொள்ளை உள்பட என்ன குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் போலீசுக்கு புகார் கொடுப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் கடமையும் அவருக்குண்டு. இதனால் பலருடைய விரோதத்துக்கு ஆளாகும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். டாக்டர்கள் பாதுகாப்புச்சட்டம் இருப்பதுபோல, கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் சட்டம்வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் ஒரு பெரிய வெற்றியை காவல்துறை அடைந்துள்ளதோ, அதுபோல மணல்கொள்ளையை ஒழிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் மணல்கொள்ளையை தடுக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னு பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, தொடக்கக்காலத்தில் முறையாக பின்பற்றப்பட்டு, இப்போது தொய்வு ஏற்பட்டதால்தான் மணல்கொள்ளை தொடர்கிறது. கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வழங்கியிருப்பது, அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது என்றாலும், இனியும் இதுபோல ஒரு துயரச்சம்பவம் நடக்கக்கூடாது.