பிரதமரின் ரஷிய பயணம்; முத்தான பயணம்!
|பிரதமர் மோடி இதுவரை ரஷியாவுக்கு 7 முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இத்தாலியில் நடந்த ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக ரஷியாவுக்கு சென்றிருக்கிறார். இதுவரை அவர் ஆட்சி பொறுப்பையேற்ற நேரங்களில் எல்லாம் நட்பு நாடுகளுக்கே, அதிலும் குறிப்பாக அண்டை நாடுகளுக்கே முதல் பயணமாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 2014-ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் பயணமாக பூடானுக்கு சென்றிருந்தார். 2019-ல் மாலத்தீவுக்கும், இலங்கைக்கும் சென்றிருந்தார். இந்த முறை அந்த மரபை மாற்றி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக சென்றார்.
ரஷியாவுக்கு சென்றதிலும் ஒரு காரணம் இருக்கிறது. ரஷிய தலைநகரான மாஸ்கோவில் 22-வது இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்தது. இந்த பயணத்தையும் சேர்த்தால் பிரதமர் மோடி இதுவரை ரஷியாவுக்கு 7 முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். ரஷிய அதிபர் புதின் 2021-ல் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நல்ல நட்புறவு நிலவி வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட ரஷிய பயணம் பல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வழிவகுத்தது.
இந்தியாவுக்கு தேவையான ராணுவ ஆயுதங்களை ரஷியாவில் இருந்தே வழக்கமாக 60 முதல் 70 சதவீதம் வரை இறக்குமதி செய்துவருகிறோம். இந்த சூழ்நிலையில் ரஷியா, உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்த பிறகு ரஷியாவை பெரும்பான்மையான நாடுகள் தனிமைப்படுத்திவிட்டன. 'கஷ்டமான நேரத்தில் கை கொடுப்பான் தோழன்' என்பதுபோல இந்தியா தன் நீண்டகால நட்பு நாட்டை கைவிட்டுவிடவில்லை. ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுத்ததை இந்தியா ஆதரிக்கவில்லை.
இருவருக்கும் உள்ள பிரச்சினையை இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றே வலியுறுத்தி வந்தது. பிரதமரின் இந்த பயணத்திலும் அதையே வலியுறுத்தினார். பிரதமர் மோடிக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே நடந்த 3 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக 2030-க்குள் பரஸ்பர வர்த்தகம் ரூ.8.2 லட்சம் கோடிக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் சலுகை விலையிலும், பெருமளவில் உரமும் ரஷியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷியாவில் இருந்து 45 நாட்களில் மும்பை துறைமுகத்துக்கு கச்சா எண்ணெயும், உரமும் கொண்டுவரப்படுகிறது. இப்போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக அவை இனி சென்னை துறைமுகத்துக்கு 15 முதல் 20 நாட்களில் வந்து சேர்ந்துவிடும். இதன் மூலம் சென்னை துறைமுகம் நல்ல வளர்ச்சி பெறும். உக்ரைன் போரில் சண்டைபோட இந்தியாவில் இருந்து மாதம் ரூ.2 லட்சத்துக்கு ராணுவ உதவியாளர் வேலைக்கு கொண்டுசெல்கிறோம் என்று ஆசை வார்த்தை காட்டி அழைத்து செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அங்கு போர்க்களத்துக்கு ராணுவ வீரர்களாக அனுப்பப்பட்டனர். அதில் 5 பேர் மரணமடைந்துவிட்டனர்.
உக்ரைன் போரில் பணியாற்றும் இந்தியர்களை பிரதமரின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக விடுவிக்க ரஷிய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல பிரதமர் மோடிக்கு ரஷியாவின் 300 ஆண்டு பழமையான மிக உயரிய விருதாக கருதப்படும் 'ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்தலர்' என்ற விருதை புதின் வழங்கி சிறப்பித்தது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.